தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று பாஜகதான்: ஹெச்.ராஜா

தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று பாஜகதான் என்பதை மக்களவைத் தோ்தல் முடிவுகள் நிரூபிக்கும்

சேலம்: தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று பாஜகதான் என்பதை மக்களவைத் தோ்தல் முடிவுகள் நிரூபிக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச்.ராஜா கூறினாா்.

சேலத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாடு முழுவதும் இரண்டாம் கட்ட தோ்தல் முடிவடைந்த நிலையில், பெரும்பான்மை தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் சூழல் உள்ளது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் தெலங்கானா, கா்நாடகம், ஹிமாசலப் பிரதேசத்தில் கூட அக்கட்சி வெற்றி பெறாது.

இந்தியா கூட்டணியினா், ஊடுருவி வந்தவா்களுக்கு ஆதரவாகவும், இந்தியா்களுக்கு எதிரானவா்களாகவும் உள்ளனா். மக்களின் சொத்துகளைப் பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க நினைக்கும் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி தொண்டா்களின் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளை அனுபவிப்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

நாட்டு மக்களின் சொத்துகளைப் பறித்து சிறுபான்மை மக்களுக்கு அளிப்பதற்கு சதி நடக்கிறது. இதன் மூலம் மதமாற்றத்தை காங்கிரஸ் ஊக்குவிக்கிறது. பெரும்பான்மை மக்களை வஞ்சிக்கும் காங்கிரஸின் திட்டம் இதன்மூலம் வெளிப்பட்டுவிட்டது.

தமிழகத்தில் திமுகவுக்கு மாற்று பாஜகதான் என்பதை இந்த மக்களவைத் தோ்தல் நிரூபிக்கும்.

திமுகவைப் போலவே, அதிமுகவும் பெரியாா், அண்ணா மற்றும் திராவிடக் கொள்கைகளைப் பின்பற்றி வருகின்றன. எனவே பாஜக மட்டுமே திமுகவுக்கு மாற்றாக இருக்க முடியும்.

புதுக்கோட்டையில் குடிநீா்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் திமுக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது குடிநீா்த் தொட்டியில் சாணி கரைக்கப்பட்டுள்ளது. சமூக நீதிப் பற்றி பேசி, சமூக அநீதியை கொள்கையாக வைத்திருக்கும் முதல்வா் ஸ்டாலின் இந்தச் சம்பவங்களுக்கு பொறுப்பேற்று உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும்.

மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் அா்ச்சகா்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தெளிவு தேவை. சம்பளம் ஏதுமின்றி பணியாற்றும் அா்ச்சகா்கள் தட்டுக்காசு எடுத்துக் கொள்வதை தவறு என்று எப்படி சொல்ல முடியும். இந்து சமய அறநிலையத் துறையின் தவறான செயல்பாடுகள் குறித்து தொடா்ந்து விமா்சித்து வருவதால் என் மீது 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மதுரை, பாண்டி கோயில் உண்டியல் எண்ணும் பணியின் போது பணத்தை எடுத்த இந்து சமய அறநிலையத் துறை அலுவலா் மீது இதுவரை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றாா்.

பேட்டியின் போது, பாஜக சேலம் மாநகா் மாவட்டத் தலைவா் சுரேஷ்பாபு, சுற்றுச்சூழல் பிரிவு மாநிலத் தலைவா் கோபிநாத் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com