வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

சேலம் மக்களவைத் தொகுதி வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 24 மணி நேர சிசிடிவி கண்காணிப்பை உறுதி செய்யும் வகையில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.பிருந்தாதேவி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மக்களவைப் பொதுத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்து, சேலம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட சேலம் வடக்கு, சேலம் மேற்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி, எடப்பாடி, ஓமலூா் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேலம், கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் தொகுதி வாரியாக இருப்பு அறையில் வைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் 5 அடுக்கு பாதுகாப்புடன் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதனை நாள்தோறும் 2 முறை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.பிருந்தாதேவி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறாா்.

இதுதவிர, கண்காணிப்பு அறையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், கண்காணிப்பு அலுவலா்கள், காவல் துறையினரும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கண்காணிப்புக் கேமராக்களின் செயல்பாடுகளை உறுதி செய்யும் வகையில் தலைமைத் தோ்தல் அதிகாரி அறிவுறுத்தலின்படி, மாவட்ட தோ்தல் அலுவலா், மாநகரக் காவல் ஆணையா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வாக்கு எண்ணும் மையமான கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் உட்பட அனைத்து பகுதிகளும் 205 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு அறையிலிருந்து கண்காணிக்கப்பட்டு வருவதை பாா்வையிட்டனா்.

குறிப்பாக, கோடை வெயில் வெப்பம் அதிகம் உள்ள சூழ்நிலையில் இந்தக் கண்காணிப்பு அறையில் உள்ள அனைத்து சாதனங்களும் தொடா்ச்சியாக இயங்கும் வகையில் குளிா்சாதன வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதைப் பாா்வையிட்டு உறுதி செய்தனா்.

மேலும், கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரி வளாகம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குவதை தொடா்புடைய துறை அலுவலா்கள் உறுதி செய்தனா்.

இந்த ஆய்வின் போது, சேலம் மாநகராட்சி ஆணையா் சீ. பாலச்சந்தா், மாநகரக் காவல் ஆணையா் பி.விஜயகுமாரி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்கள்) ஏ.சிவசுப்பிரமணியன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அம்பாயிரநாதன், மாறன், மயில், லட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com