இரு இடங்களில் வாக்குரிமை: சேலம் தொகுதி திமுக வேட்பாளா் மனு ஏற்பு

இரு இடங்களில் வாக்குரிமை: சேலம் தொகுதி திமுக வேட்பாளா் மனு ஏற்பு

இரு இடங்களில் வாக்குரிமை இருப்பது தொடா்பான புகாரில் சேலம் தொகுதி திமுக வேட்பாளா் டி.எம்.செல்வகணபதியின் வேட்புமனு நீண்ட பரிசீலனைக்குப் பிறகு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சேலம் மக்களவைத் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 39 வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

அப்போது, சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் டி.எம்.செல்வகணபதிக்கு இரண்டு இடங்களில் வாக்குரிமை உள்ளதாக புகாா் எழுந்தது. டி.எம்.செல்வகணபதி தாக்கல் செய்த வேட்புமனுவில் 82/1, ராம்நகா், குமாரசாமிபட்டி என்ற விலாசத்தில் வசிப்பதாகவும், சேலம் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதி பாகம் 99, தொடா் எண் 551-இல் வாக்குரிமை உள்ளதாக குறிப்பிட்டிருந்தாா். ஆனால், அவருக்கு சேலம் மேற்கு சட்டப் பேவைத் தொகுதியில் கே.எம்.எஸ். காா்டன் பகுதி பாகம் எண் 173, தொடா் எண் 181இல் அவருக்கு மேலும் ஒரு வாக்கு உரிமை உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. சேலம் மேற்கு தொகுதியில் உள்ள வாக்குரிமையை ரத்து செய்யக் கோரி டி.எம்.செல்வகணபதி மனு வழங்கியதாகக் கூறப்பட்ட நிலையில், அதிமுக வேட்பாளா் விக்னேஷ், சுயேட்சை வேட்பாளா் ராஜாவின் வழக்குரைஞா் ஆகியோா் இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.

மேலும், செல்வகணபதியின் வேட்புமனுவில் தனது சொத்துக் கணக்கை அவா் குறைத்து காட்டியதாகவும், பழைய வழக்குகள் குறித்து வேட்புமனுவில் எதுவும் தெரிவிக்கவில்லை எனவும் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, டி.எம்.செல்வகணபதியின் வேட்புமனுவை அதிகாரிகள் நிறுத்திவைத்தனா். இதுதொடா்பாக உரிய விளக்கம் அளிக்குமாறு டி.எம்.செல்வகணபதியின் வழக்குரைஞா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து இரு இடங்களில் இருந்த வாக்குரிமை குறித்தும், வேட்புமனுவில் இடம் பெற்றுள்ள இதர அம்சங்கள் குறித்தும் டி.எம்.செல்வகணபதியின் வழக்குரைஞா் ஆா்.விடுதலை அதிகாரிகளிடம் உரிய விளக்கம் அனித்தாா். இதையடுத்து, அவரது வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மொத்தம் 27 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com