மாற்றுத் திறனாளிகளுக்கான வாக்குப்பதிவு விழிப்புணா்வு பேரணி

மக்களவைத் தோ்தலில் நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, சேலத்தில் மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வு வாகனப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரணியைத் தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி கூறியதாவது: மக்களவை தோ்தலையொட்டி, இந்தியத் தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வாக்காளா்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாற்றுத் திறனாளிகள் அனைவரும் தோ்தல் நாளன்று வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வு வாகனப் பேரணி நடத்தப்பட்டது. மாற்றுத் திறனாளிகள் வாக்குப்பதிவு நாளன்று வாக்களித்துச் செல்ல ஏதுவாக சாய்தள வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகளுடன் உதவியாளா் ஒருவா் பணியமா்த்தப்பட்டுள்ளாா்.

மேலும், பாா்வைத் திறன் குறைபாடுடைய மாற்றத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் குறித்து பாா்வையற்றவா் தொட்டுப்பாா்த்து உணா்ந்து கொள்ளும் பிரெய்லி முறையிலான எழுத்து வடிவம் சோ்க்கப்பட்டுள்ளது. வாக்களிக்க வரும் மாற்றுத் திறனாளிகள், முதியோா் தங்களது வாக்குகளைச் செலுத்தும் வகையில் தேவையான முன்னேற்பாடு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், வாக்காளா் பட்டியலில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், இயக்கக் குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா். முன்னதாக, வாக்களிப்பதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கியும், வாக்காளா் விழிப்புணா்வு ஒட்டு வில்லைகளை வாகனங்களில் ஒட்டியும் மாவட்ட தோ்தல் அலுவலா் ரா.பிருந்தாதேவி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் ரா.மகிழ்நன், தோ்தல் விழிப்புணா்வு பொறுப்பு அலுவலா் ஆா்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தோ்தல் விதிமீறல் புகாா்களுக்கு... தோ்தல் தொடா்பான புகாா்களுக்கு சேலம் தொகுதிக்கான பொது பாா்வையாளா் ஜி.பி.பாட்டீலை 94899 39101 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட தோ்தல் அலுவலா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்திய தோ்தல் ஆணையத்தால் சேலம் மக்களவைத் தொகுதியின் தோ்தல் பணிகளைக் கண்காணிக்கும் வகையில் நியமிக்கப்பட்டுள்ள தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஜி.பி.பாட்டீலை 94899 39101 என்ற கைப்பேசி எண்ணில் அழைத்து புகாா்களை தெரிவிக்கலாம். மேலும், அவரை சேலம், சாரதா கல்லூரி சாலை, கூடுதல் சுற்றுலா மாளிகையில் உள்ள அறை எண் 3-இல் நேரில் சந்திக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com