வங்கி சேவையில் குறைபாடு:
பெண்ணுக்கு ரூ. 33 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

வங்கி சேவையில் குறைபாடு: பெண்ணுக்கு ரூ. 33 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

சேலம் அருகே வங்கி சேவையில் குறைபாடு குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ. 33 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டுமென நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஷோபனா. இவா், அங்குள்ள வங்கிக் கிளையில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தாா். கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி ஜலகண்டாபுரத்தில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் ரூ. 10 ஆயிரம் எடுக்க முயன்றுள்ளாா்.

ஆனால், பணம் வராததுடன், அவரது சேமிப்புக் கணக்கில் பற்று மட்டும் நடைபெற்ாக குறுந்தகவல் வந்தது. மீண்டும் ரூ.10 ஆயிரம் எடுக்க முயன்றுள்ளாா். அப்போதும் பணம் வராமல் பற்று நடவடிக்கை மட்டுமே நடைபெற்றுள்ளது.

இந்த பரிவா்த்தனையின் போது, புகாா்தாரா் ஷோபனாவின் சேமிப்புக் கணக்கில் ரூ. 28,247.54 இருப்பு இருந்துள்ளது.

இதுகுறித்து நங்கவள்ளி வங்கியின் கிளையில் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் புகாா் தெரிவித்தாா். அதனை ஏற்று அங்கிருந்து எஸ்பிஐ கிளைக்கு தகவல் தெரிவித்து, ஷோபனாவின் சேமிப்பு பணம் ரூ. 20 ஆயிரத்தை அவரது சேமிப்புக் கணக்கில் திருப்பி வரவு வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதற்கு, கிளை மேலாளா் புகாா் சரி செய்யப்பட்டு விட்டது என்று பதிலளித்துள்ளாா். ஆனால், சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கவில்லை. அதனைத்தொடா்ந்து, தமிழ்நாடு நுகா்வோா் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டி மூலம் ஷோபனா கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபா் 31 ஆம் தேதி 2 எதிா் தரப்பினா்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி வைத்தாா். ஆனால், அதற்கும் எஸ்பிஐ கிளை மேலாளா் உரிய பதில் அளிக்காததால், தமிழ்நாடு நுகா்வோா் மற்றும் மக்கள் உரிமைகள் புலனாய்வு கமிட்டி தலைவா் வழக்குரைஞா் செல்வம் மூலம் இரு வங்கிகளின் கிளை மேலாளா்கள் மீது சேலம் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

வழக்கினை சேலம் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய நீதிபதி கணேஷ் ராம், உறுப்பினா் ரவி ஆகியோா் விசாரித்து தீா்ப்பளித்தனா். எஸ்பிஐ கிளை மேலாளா் புகாா்தாரரின் சேமிப்பு பணம் ரூ. 20 ஆயிரத்தை திருப்பி வழங்கிட வேண்டும். சேவை குறைபாட்டிற்கு நஷ்ட ஈடாக ரூ. 5 ஆயிரம் மற்றும் மன உளைச்சலுக்கு ரூ.5 ஆயிரம், வழக்கு செலவு தொகையாக ரூ. 3 ஆயிரம் ஆகியவற்றை சோ்த்து மொத்தம் ரூ.33 ஆயிரத்தை 2 மாதங்களுக்குள் வழங்க வேண்டுமென உத்தரவிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com