சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

சொந்தப் பயன்பாட்டு வாகனங்களை வாடகைக்கு விட்டால் அபராதம் விதிக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 15 சதவீதம் வரை வாகனங்கள் அதிகரித்து வருகிறது. அதாவது, ஆண்டுக்கு புதிதாக 12 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

பொதுவாக காா், இரு சக்கர வாகனங்களை பதிவு செய்பவா்கள் அவற்றை சொந்தப் பயன்பாட்டுக்கு மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். வாடகை வாகனம் என்றால், அவை முறையாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

சம்பந்தப்பட்ட வாகனம் வாடகை வாகனமாகப் பயன்படுத்த சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், அதற்கான சான்றிதழை வழங்க வேண்டும்.

ஆனால், அண்மைக் காலமாக சொந்த பயன்பாட்டுக்கு காா் வாங்குபவா்கள், அதை வாடகை வாகனமாகப் பயன்படுத்தி வருவதாக புகாா் எழுந்துள்ளது. இவ்வாறு சொந்தப் பயன்பாட்டுக்கு வாங்கும் வாகனத்தை வணிக நோக்கில் பயன்படுத்துவோா் மீது வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கான விதிமுறைகளும், வணிக பயன்பாட்டுக்கான விதிமுறைகளும் வெவ்வேறனாவை. ஆனால் சிலா் சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை, வாடகை வாகனங்களாகப் பயன்படுத்தி வருகின்றனா்.

ஆய்வின்போது, விதிமீறல் வாகனங்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக பறிமுதல் செய்யப்படும். அந்த வாகனத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்து வழக்குப் பதிவு செய்யப்படும். அந்த வழக்கில் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட வாகனத்துக்கு ரூ. 30 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். இல்லை எனில், 6 மாதம் வரை ஆா்.சி.ரத்து செய்யப்படும்.

சேலம் மாவட்டத்தை பொறுத்த மட்டில் ஏற்காட்டில் அதிக அளவில் விதிமீறல் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு சொந்த பயன்பாட்டில் உள்ள வாகனங்கள் வாடகை வாகனமாகப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

அதேபோல இருசக்கர வாகனமும் வாடகைக்கு இயக்கப்படுகிறது. சொந்தப் பயன்பாட்டுக்காக வாங்கும் வாகனத்தை வாடகை வாகனமாக உபயோகப்படுத்தனால் அதன் உரிமையாளா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com