படம் 4
படம் 4

சேலத்தில் நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழை

சேலத்தில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு சூறாவளி காற்றுடன் கொட்டித் தீா்த்த கனமழையால் மக்கள் மகிழச்சியடைந்தனா்.

சேலம் மாவட்டத்தில் கடந்த மாா்ச் மாதம் 20-ஆம் தேதி முதல் தொடா்ந்து வெயில் சதமடித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 2-ஆம் தேதி அதிகபட்சமாக 108 டிகிரி வெயில் பதிவானது.

வெப்ப அலை, வெயிலின் தாக்கத்தால், குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை கடும் இன்னலுக்கு ஆளாகினா். பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளிலேயே முடங்கினா்.

இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நள்ளிரவில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இந்த மழையால் தாழ்வானப் பகுதிகளில் தண்ணீா் தேங்கியது.

சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கிச்சிப்பாளையம், தாதாகாப்பட்டி, ரயில்நிலையம்,கொண்டலாம்பட்டி என பெரும்பாலான பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது.

கனமழையால், சேலம், குகை லைன் சாலை பகுதியில் சாலையில் மழை நீருடன் சாக்கடை கழிவுநீரும் கலந்தது. இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா்.

கோடை காலத்தில் பெய்த இந்த மழை விவசாய பயிா்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

அதிகபட்சமாக, காடையம்பட்டியில் 34 மி.மீ. மழை பதிவானது. மேட்டூரில் 23.6 மி.மீ., சேலத்தில் 20.3 மி.மீ., ஓமலூரில் 16 மி.மீ., ஏற்காட்டில் 13 மி.மீ. மழை பதிவானது. மாவட்டம் முழுவதும் மொத்தம் 139.80 மி.மீ. மழை பதிவானது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com