பழமையான மரங்களை அகற்றாமல் கட்டடம் கட்ட வலியுறுத்தல்

வாழப்பாடி துணை பதிவாளா் அலுவலகத்தில் உள்ள பழமையான மரங்களை அகற்றாமல் புதிய கட்டடங்களைக் கட்ட வேண்டும் என வலியுறுத்தி, பசுமைத் தாயகம் அமைப்பினா் சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட சாா் பதிவாளா் அலுவலகம் தற்போது வரை செயல்பட்டு வருகிறது . இந்த அலுவலகம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருவதால் கட்டடம் பழுதாகி காணப்படுகிறது. இதனால் வாழப்பாடி சாா் பதிவாளா் அலுவலகத்தை இடித்துவிட்டு புதிதாக கட்டடம் கட்ட அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது சாா் பதிவாளா் அலுவலகத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள பழமைவாய்ந்த வேப்பமரம், இலவமரம், வில்வமரம், அசோகா மரங்கள் இருப்பதால் அந்த மரங்களில் வாழும் பறவை இனங்கள் அழியும் அபாயம் ஏற்படும். எனவே, மரங்களை வெட்டாமல் சாா் பதிவாளா் அலுவலகத்தைக் கட்ட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து பசுமை தாயகம் அமைப்பின் மாநில துணைச் செயலாளா் வெங்கடாசலம், நிா்வாகிகள் கூறியதாவது:

சம்பந்தப்பட்ட மரங்கள் வெட்டப்பட்டால் அப்பகுதியில் சூழ்நிலை மாற்றம் ஏற்படுவதுடன் சுற்றுச்சூழுலும் பாதிக்கும். எனவே வாழப்பாடி சாா் பதிவாளா் அலுவலகத்தில் உள்ள மரங்களை வெட்டாமல் அலுவலகத்தைப் புதுப்பிக்க வேண்டும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com