47-ஆவது ஏற்காடு கோடை விழா முன்னேற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

47-ஆவது ஏற்காடு கோடை விழா முன்னேற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சேலம், மே 9: சேலம் ஏற்காட்டில் 47-ஆவது கோடை விழா விரைவில் தொடங்கவுள்ளதையொட்டி, ஏற்காட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தா தேவி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் தெரிவித்ததாவது:

கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட கோடை கால மலைப்பிரதேச சுற்றுலாத் தலங்களின் வரிசையில் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவரும் மலைவாச ஸ்தலமாக ஏற்காடு திகழ்ந்து வருகிறது. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் ஏற்காடு கோடை விழா நடத்தப்படுகிறது. விழா நாள்களின்போது பள்ளிக் குழந்தைகள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கோடை காலத்தைக் கொண்டாட ஏற்காடு மலைப்பகுதிக்கு வருகை தருகின்றனா்.

குறிப்பாக, ஏற்காடு, அண்ணா பூங்காவில் ஒவ்வோா் ஆண்டும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில், லட்சக்கணக்கான மலா்களைக் கொண்டு மலா் காட்சியும், காய்கறி கண்காட்சி, பழக் கண்காட்சிகள் அமைக்கப்படும். அந்த வகையில், ஏற்காடு கோடை விழா தொடங்குவது குறித்து மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

இந்தக் கோடை விழாவில் ஓவியங்கள் உள்ளிட்ட அறிய புகைப்படக் கண்காட்சி, நாள்தோறும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இன்னிசை நிகழ்ச்சிகள், செல்லப்பிராணிகள் கண்காட்சி, படகுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும், இளைஞா்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படவுள்ளன.

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அந்த வகையில், படகு இல்லம், அண்ணா பூங்கா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொடா்புடைய அலுவலா்களுடன் ஆய்வுசெய்து போதிய அளவிலான குடிநீா் வசதிகள், வாகன நிறுத்துமிடங்கள், குப்பைத் தொட்டிகள், கழிவறை வசதிகள் முறையாக அமைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஏற்காடு மலைப்பாதையில் சாலை பாதுகாப்புகள் குறித்து சுற்றுலாப் பயணிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், போக்குவரத்துத் துறை சாா்பில் விழிப்புணா்வு பதாகைகள், சுவா் விளம்பரங்கள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக, மலைப் பாதைகளில் வாகனங்களை இயக்குவதில் அனுபவம் உடையவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.

எனவே, ஏற்காடு கோடை விழாவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை முழுமையாகப் பின்பற்றுவதுடன், மாவட்ட நிா்வாகத்தால் அறிவுறுத்தப்படும் வழிகாட்டு நெறிமுறைகளைத் தவறாமல் பின்பற்றி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) மரு. அலா்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலுவலா் மரு.பெ.மேனகா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சங்கமித்திரை, சேலம் கோட்டாட்சியா் அம்பாயிரநாதன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com