"உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி பதப்படுத்துவதிலும் இருக்க வேண்டும்

உணவு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, அதனை பதப்படுத்துவதிலும் ஏற்பட வேண்டும் என இந்திய பயிர் பதன தொழில் நுட்பக் கழகத்தின் (தஞ்சாவூர்) இயக்குநர் கே. அழகுசுந்தரம் தெரிவித்தார்.

உணவு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, அதனை பதப்படுத்துவதிலும் ஏற்பட வேண்டும் என இந்திய பயிர் பதன தொழில் நுட்பக் கழகத்தின் (தஞ்சாவூர்) இயக்குநர் கே. அழகுசுந்தரம் தெரிவித்தார்.

 காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை, இந்திய பயிர் பதன தொழில் நுட்பக் கழகம் (தஞ்சாவூர்) இணைந்து ஊரக மேம்பாட்டிற்கான உணவு பதப்படுத்தும் தொழில் நுட்ப கருத்தரங்கை நடத்தின.

 துவக்க விழாவுக்கு, காந்தி கிராம வேளாண்மைத் துறை டீன் டி. செந்திவேல் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய பயிர் பதன தொழில் நுட்பக் கழகத்தின் (தஞ்சாவூர்) இயக்குநர் கே. அழகுசுந்தரம் பேசியது:

 இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுள்ளது. ஆனால் உற்பத்தி பொருள்களை முறையாக பதப்படுத்தி உபயோகிப்பதற்கு வசதி இல்லாததால், அவை வீணாகி வருகின்றன.

 சுய தேவை, கால்நடைகளின் தேவை மற்றும் விதை தேவை உள்ளிட்டவைகளுக்கு  பயன்படுத்தியது போக, மீதம் உள்ளவற்றை பதப்படுத்தி சேமிப்பதற்கு நவீன தொழில் நுட்ப முறைகளைப் பயன்படுத்த வேண்டும். உணவு உற்பத்தியில் 50 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை தற்போது முழுமையாக மாறி விட்டது.  வேளாண்மை நிலங்களின் பரப்பளவு குறைந்துள்ள போதும், உற்பத்தி அதிகரித்துள்ளது. அதற்கு உறுதுணையாக இருந்த தொழில் நுட்ப வளர்ச்சியை, பதப்படுத்துவதிலும் செயல்படுத்த வேண்டும் என்றார் அவர்.  

மாவட்ட வழங்கல் அலுவலர் வி. ரவிச்சந்திரன் பேசும் போது, உற்பத்தி செய்வதில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, அதனை பதப்படுத்தி சேமிப்பதிலும் ஏற்பட வேண்டும் என்றார்.

மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் எம்.எஸ்.என். செல்வராஜ் பேசியதாவது: முதுகலைப் பட்டம் பெற்ற பல இளைஞர்கள், இன்று வேளாண்மைத் துறையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். 

இயற்கை விவசாயம், சொட்டு நீர் பாசனம் போன்ற நவீன தொழில்நுட்ப முறைகளை கடைபிடித்து உற்பத்தியை அதிகரித்து, அவற்றை சந்தைப்படுத்துவதிலும் அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும், விவசாயிகளின் பயன்பாட்டிற்காக 7 குளிர் பதனக் கிடங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. வாழைக்காய்களை பழுக்க வைக்கும் மையமும் ரூ.40 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது.

இதுபோன்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு விவசாயிகள், பொருளாதார முன்னேற்றம் பெற வேண்டும் என்றார்.  சாகுபடி மற்றும் பதப்படுத்தும் வழிமுறைகள் குறித்த மலரை காந்தி கிராம கிராமிய பல்கலை. துணைவேந்தர் (பொறுப்பு) ஏ. ஜோசப் துரைராஜ் வெளியிட்டார்.  நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) டி. கார்த்திகேயன், கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் ஆர். உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com