பழனி பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் மக்காச்சோளப் பயிர்கள் சேதம்: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

பழனியில் "கஜா' புயல் காரணமாக சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளப் பயிர்கள் சேதமடைந்ததால்  விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

பழனியில் "கஜா' புயல் காரணமாக சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளப் பயிர்கள் சேதமடைந்ததால்  விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே இரண்டாது அதிகமாக மக்காச்சோளம் பயிரிடும் பகுதி பழனியாகும்.  இதனால் பழனியை அடுத்த வாகரையில் அரசின் மக்காச்சோள ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்டுள்ளது.  
தற்போது படைப்புழு தாக்குதலால் பல இடங்களிலும் மக்காச்சோளப் பயிர்கள் அதிகளவில் சேதமடைந்துள்ளன. இதனால்  விவசாயிகள் மருந்தடித்து பயிர்களை காத்து வந்தனர். தற்போது பூப்பூத்து காய்கள் பிடித்துள்ளது.  
இந்நிலையில் வெள்ளிக்கிழமை பெய்த "கஜா' புயல் மழையால், பழனியை அடுத்த அமரபூண்டி, கஞ்சநாயக்கன்பட்டி, கணக்கன்பட்டி, கோம்பைப்பட்டி, கொல்லபட்டி, மொல்லம்பட்டி, தொப்பம்பட்டி, கந்தப்பகவுண்டன்வலசு என பல்வேறு கிராமங்களிலும் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் முற்றிலும்  சேதமடைந்துள்ளன.  மக்காச்சோள பயிர்கள் சேதமடைந்ததால் அமரபூண்டியை சேர்ந்த விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மற்ற விவசாயிகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்துள்ளார்.  
இதுமட்டுமன்றி கத்தரி, தக்காளி, கரும்பு போன்ற பயிர்களும் அதிகளவில் சேதமடைந்துள்ளன. ஆகவே பழனி பகுதியில் முழுமையாக ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை பெற்றுத் தர சட்டப்பேரவை, மக்களவை  உறுப்பினர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com