பழனி மலைக்கோயிலில் நீதிபதிகள் குழு ஆய்வு

பழனி மலைக்கோயிலில் அன்னதான வளாகம், பக்தர்கள் தரிசன வரிசை,


பழனி மலைக்கோயிலில் அன்னதான வளாகம், பக்தர்கள் தரிசன வரிசை, தங்கத்தொட்டில் காணிக்கை மையம் உள்ளிட்ட பல பகுதிகளில் சனிக்கிழமை திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி முரளி சங்கர் மற்றும் குற்றவியல் நீதிபதி நம்பி தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகத்தில் உள்ள கோயில்களில் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் மற்றும் சிலைகளுக்கான பாதுகாப்பு குறித்து அந்தந்த மாவட்ட நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி முரளிசங்கர், கூடுதல் மாவட்ட நீதிபதி மதுரசேகரன், தலைமை குற்றவியல் நீதிபதி நம்பி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
ரோப்கார் மூலம் மலைக்கோயில் சென்ற அவர்கள் மலைக்கோயிலில் கட்டணம் மற்றும் இலவச தரிசன வரிசைகளில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள், அன்னதான கூடத்தில் காத்திருக்கும் அறையில் செய்யப்பட்டுள்ள வசதிகள் மற்றும் சமையல் கூடத்தில் அன்னதானம் தயாரிக்கும் முறைகளை ஆய்வு செய்தனர். அன்னதானம் சுகாதாரமாக தயாரிக்கப்படுகிறதா என்றும் அதிகாரிகளிடம் விசாரித்தனர்.
தொடர்ந்து தங்கரதம் மற்றும் தங்கத்தொட்டில் போன்றவை பதிவு செய்யும் இடத்தில் பக்தர்களுக்கு போதிய வசதிகள் உள்ளதா என்றும் ஆய்வு செய்தனர்.
அடிவாரத்தில் உள்ள ரோப்கார் மற்றும் விஞ்ச் நிலையங்களில் இரு கட்டண தரிசன வரிசைகளிலும் முறையாக கட்டண டிக்கெட் வழங்கப்படுகிறதா என பக்தர்களிடம் விசாரித்த நீதிபதிகள் வரிசையில் நிற்பவர்களிடம் கழிப்பறை, குடிநீர் வசதி குறித்தும் கேட்டறிந்தனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன் பழனி திருஆவினன்குடி கோயில், பஞ்சாமிர்த நிலையம், முடிக்கொட்டகை போன்ற இடங்களை நீதிபதிகள் குழு ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வின் போது பழனிக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொறுப்பு) செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com