உயர்கல்வித் துறையில் சமூக அறிவியல் ஆராய்ச்சிக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு: மத்திய மனிதவளத் துறை செயலர்

உயர் கல்வித்துறையில் சமூக அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக

உயர் கல்வித்துறையில் சமூக அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் செயலர் ஆர்.சுப்பிரமணியம் தெரிவித்தார். 
 திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில், அரசியல் அறிவியல் துறை சார்பில் "கிராம சுயராஜ்யம் - கிராம மறுசீரமைப்பிற்கான காந்தியப் பார்வை' என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு பல்கலை. துணைவேந்தர் சு.நடராஜன் தலைமை வகித்தார். மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் உயர் கல்வித்துறை செயலர் ஆர்.சுப்பிரமணியம், புதுதில்லியில் இருந்தவாறு காணொலி காட்சி மூலம் இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசியதாவது: 
 நாட்டின் இன்றைய சூழலில் காந்திய கொள்கைகள் தொடர்பான புரிதல் அனைத்து தரப்பினருக்கும் இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக காந்தியடிகளின் அஹிம்சை  கொள்கை எக்காலத்திலும் அழிவில்லாதது. அதனை பின்பற்றினால் மனிதாபிமானம் கொண்டவர்கள் வாழும் நாடாக இந்தியா உயர்ந்து நிற்கும். 
 எதிர்காலத்தில் காந்தியக் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கும் சமுதாயத்தினரை உருவாக்கும் பணியில் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் வழியில் பிற கல்வி நிறுவனங்களும் ஈடுபட வேண்டும். உயர் கல்வித்துறையில் சமூக அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமூக பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தும் ஈடு இணையற்ற பொறுப்பு கல்வி நிறுவனங்களுக்கு உள்ளது. கிராமப்புற மக்கள் சமூக, பொருளாதார, அரசியல், சுற்றுச்சூழல் உள்ளிட்ட நிலைகளில் வளர்ச்சி பெற வேண்டும்  என்பதே காந்தியடிகளின் விருப்பம். அந்த மாற்றத்தை  ஏற்படுத்தக் கூடிய  ஆய்வுகளை  உயர் கல்வி நிறுவனங்கள் முன்னெடுக்க வேண்டும் என்றார்.
 அதைத்தொடர்ந்து கருத்தரங்க தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கேரள முன்னாள் தலைமைச் செயலரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான எஸ்.எம்.விஜய் ஆனந்த் பேசியதாவது:
 தேர்வு எழுதுவதன் மூலம் தேர்ச்சிப் பெறக் கூடிய அறிவு மட்டுமின்றி, படைப்பாற்றலுடன் கூடிய அறிவு மாணவர்கள் கிடைக்க வேண்டும். கிராமப்புற மக்கள் நீடித்த நிலையான வளர்ச்சி பெறுவதற்கு தடையாக ஏழ்மை இருந்து வருகிறது. அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள், அந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவில்லை. 
 கிராம ஊராட்சிகளின் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்வதற்கு காந்தியக் கொள்கைகளை இளைஞர்கள் அறிந்து கொள்வது அவசியம். கேரளத்தில் 3 இல் 1 பகுதி ஊராட்சி நிர்வாகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. எழுத்தறிவு விகிதத்தில் நாட்டிலேயே முதன்மையாக விளங்கும் கேரளத்தில் தான், சுகாதார மேம்பாடு கேள்விக்குறியாக உள்ளது. ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு, பிரதி பலன் பாராமல் கிராமங்களின் வளர்ச்சிக்கு உழைக்க முன் வர வேண்டும். காந்தியம் இல்லாமல், சமுதாய மாற்றத்தை ஏற்படுத்துவது இயலாத காரியம் என்றார். 
நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் ரகுபதி, பழனித்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com