திண்டுக்கல் மாவட்டத்தில்  39 இடங்களில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத 39 இடங்களில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடத்துவதற்கும், 252 இடங்களில் தெருமுனைப் பிரசாரம்  நடத்துவதற்கும்


பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத 39 இடங்களில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடத்துவதற்கும், 252 இடங்களில் தெருமுனைப் பிரசாரம்  நடத்துவதற்கும்  அரசியல்  கட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டி.ஜி.வினய் தெரிவித்தார். 
தேர்தல் பணிகள் குறித்து செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை தெரிவித்தது:  திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 17.68 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். அதன் பின்னர் நடைபெற்ற திருத்தப் பணியின்போது, 37,324 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 35,147 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 1,166 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 
இ- வாக்காளர் பட்டியல்: திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 1,475 ராணுவ வீரர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதுவரையிலும், தபால் ஓட்டு மூலம் ராணுவ வீரர்கள் வாக்குப் பதிவு செய்து வந்த நிலையில், தற்போது மின்னணு முறையில் தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட பின் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 
வாக்குச் சாவடிகள்: மாவட்டம் முழுவதும் 2,097 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் 1,790 வாக்குச் சாவடிகளும், இடைத் தேர்தல் நடைபெறும் நிலக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 266 வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. 
 போக்குவரத்து வசதி இல்லாத வெள்ளகவி, சின்னூர், பெரியூர், மஞ்சம்பட்டி, எல்.மலையூர், பெரிய மலையூர், சின்ன மலையூர் ஆகிய மலை கிராமங்களிலும் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுள்ளன. 
ரூ.14.14 லட்சம் பறிமுதல்: மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.14.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சுவிதா செயலி மூலம், தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் அரசியல்  கட்சிகள் அனுமதி பெற விண்ணப்பிக்கலாம். சுவிதா செயலியில் விண்ணப்பித்தால், அனைத்து தடையில்லா சான்றிதழ்களையும் எளிதாக பெற முடியும். 
திண்டுக்கல் நகர் மற்றும்  சின்னாளப்பட்டி, ஒட்டன்சத்திரம், பழனி போன்ற பகுதிகளில் சில வாக்குச் சாவடிகளில் 
கடந்த 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களின் போது குறைவான வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. அந்த பகுதிகளில் 100 சதவீத வாக்குப் பதிவு நடைபெற வேண்டும் என்பதற்காக கூடுதல் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
39 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி: திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை 39 இடங்களில் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்தவும், 252 இடங்களில் தெருமுனைப் பிரசாரம் நடத்தவும்  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறான பகுதிகளில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்படாது என்றார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.சக்திவேல், தேர்தல் தனி வட்டாட்சியர் சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com