அமரபூண்டியில் தண்ணீரின்றி பொதுமக்கள் அவதி: 9 குளங்களை மீட்டுத் தருமாறு கோரிக்கை

பழனியை அடுத்த அமரபூண்டி, மேலக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் இன்றி தவிக்கும் கிராம மக்கள்

பழனியை அடுத்த அமரபூண்டி, மேலக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீர் இன்றி தவிக்கும் கிராம மக்கள் கிராமத்தை காலி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  சுமார் ஒன்பது குளங்கள் இருந்த நிலையில் பல குளங்கள் மாயமாகிவிட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
பழனியை அடுத்தது அமரபூண்டி கிராமம்.  இங்கு எவிக்சன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இதையடுத்தது மேலக்கோட்டை கிராமம் உள்ளது.  இங்கும் ஐநூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.  
இந்த இரு கிராமங்களும் ஒரு காலத்தில் தண்ணீர் பிரச்னை இல்லாமல் தோப்பு, வயல்களாக இருந்த நிலையில் தற்போது வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. 
இந்த கிராமங்களில் ஆழ்குழாயில் தண்ணீர் ஆயிரம் அடிக்கும் கீழே சென்று விட்ட நிலையில் மரங்கள் அனைத்தும் காய்ந்து வருகின்றன. பழனி, ஆயக்குடி, தொப்பம்பட்டி பகுதிகளில் மழை பெய்தாலும் இங்கு மழைப்பொழிவு  இல்லை.  இதனால் குடிநீருக்கு பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் பல கி.மீ தூரம் சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர்.  தண்ணீருக்காக குடங்களை நீண்ட வரிசையில் அடுக்கி வைத்துள்ளனர்.  
நகரின் மையப்பகுதியில் பிரமாண்டமான பீக்குளம் இருந்துள்ளது. தற்போது குளம் இருந்ததற்கான தடம் மட்டுமே உள்ளது. இந்த குளத்துக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் அனைத்தும் மேடாக்கப்பட்டு குடியிருப்புகளாக மாறிவிட்டது. மேலும், அமரபூண்டியை சுற்றியுள்ள மயிலி குளம், குயிலிகுளம், காக்கை குளம், செட்டிகுளம், இரட்டை குளம், லெக்கையன் குளம் என சுமார் ஒன்பது குளங்கள் காணாமல் போய்விட்டதாக புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அமரபூண்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன் கூறியது: பீக்குளம், சர்வே எண் 91ல் உள்ள செட்டி குளம் ஆகியவற்றை காணவில்லை என மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் ஆகியோருக்கு தொடர்ந்து கடிதங்கள் அனுப்பியும் நடவடிக்கை இல்லை. ஆக்கிரமிப்பு நடக்கும் போதெல்லாம் புகார் செய்தும் வருவாய்த்துறை கண்டு கொள்ளாததால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.அமரபூண்டியை சேர்ந்த சக்திவர்மன் கூறியது: குளங்களை சுற்றியுள்ள பகுதிகளின் உரிமையாளர்கள்  குளத்தை ஆக்கிரமித்து விட்டனர்.  வயலுக்கு நீர் வரும் ஓடைகள் எல்லாம் மேடாக்கி மண்சாலைகளாக மாற்றி வருகின்றனர்.  விவசாயம் முற்றிலும் பொய்த்து விட்டது. எனது கொய்யா தோப்பு வறட்சி காரணமாக காய்ந்தே விட்டது. இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பை சந்தித்துள்ளேன் என்றார்.
 குளங்கள் குறித்து பழனி முதல் அனைத்து கிராமங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சியினர் சுவரொட்டிகள் மூலம் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தும், பயனில்லாத நிலையில் பலரும் ஊரை காலி செய்து நகருக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.   
ஆகவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக அமரபூண்டி, மேலக்கோட்டை பகுதிகளில் உள்ள குளங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, இவற்றிற்கான வரத்துக் கால்களை கண்டறிந்து சீரமைத்தால் வரும் மழைக்காலத்தில் குளங்கள் நிரம்பவும், நிலத்தடி நீர் உயரவும் வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com