புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக ரயில் மறியலுக்கு முயன்ற 45 பேர் கைது

புதிய தேசியக் கல்விக் கொள்கையை திரும்பப் பெறக் கோரி, திண்டுக்கல்லில் திங்கள்கிழமை ரயில் மறியல்

புதிய தேசியக் கல்விக் கொள்கையை திரும்பப் பெறக் கோரி, திண்டுக்கல்லில் திங்கள்கிழமை ரயில் மறியல் போராட்டத்துக்கு முயன்ற தமிழ் தேசிய கட்சியினர் 45 பேரை, போலீஸார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்ட தமிழ் தேசிய கட்சி சார்பில், புதிய தேசியக் கல்விக் கொள்கையை திரும்பப் பெறக் கோரி நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, அக்கட்சியின் தலைவர் தமிழ்நேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஆறுமுகம், மாவட்டத் தலைவர் ஜோசப் சந்தியாகு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், புதிய கல்விக் கொள்கையின் 484 பக்க அறிக்கையில் இட ஒதுக்கீடு என்ற வார்த்தையே இடம் பெறவில்லை. 
பேச்சு வழக்கில் கூட இல்லாத சமஸ்கிருதமும், தமிழர்களுக்கு தொடர்பில்லாத ஹிந்தி மொழியும் திணிக்கப்படுகின்றன.
தொழிற்கல்வி என்ற பெயரில் குலக் கல்வி முறையை கல்வியில் ஏன் புகுத்த வேண்டும். பள்ளிக் கல்வி, உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளில் தனியார் பங்களிப்பு அதிகரிப்பதற்கான பரிந்துரை, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் கல்வி உரிமையை பறிக்கும் என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கமிட்டனர்.  
இதைத் தொடர்ந்து, ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்ற தமிழ்நேசன், ஆறுமுகம் உள்பட தமிழ் தேசிய கட்சியினர் 45 பேரை, போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com