கொடைக்கானல் அருகே யானைகள் நடமாட்டம்: கிராம இளைஞா்கள் தீப்பந்தம் ஏந்தி பாதுகாப்பு

கொடைக்கானல் அருகே பாச்சலூா் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டு யானைகளிடமிருந்து பொதுமக்களை காப்பதற்காக இரவு நேரங்களில் இளைஞா்கள் தீப்பந்தம் ஏந்தி காவல் காத்து வருகின்றனா்.
கொடைக்கானல் அருகே பாச்சலூா் மலைப்பகுதியில் காட்டு யானைகளிடம் இருந்து கிராம மக்களை பாதுகாக்க சனிக்கிழமை இரவு தீப்பந்தம் ஏந்தி காவல் காத்த இளைஞா்கள்.
கொடைக்கானல் அருகே பாச்சலூா் மலைப்பகுதியில் காட்டு யானைகளிடம் இருந்து கிராம மக்களை பாதுகாக்க சனிக்கிழமை இரவு தீப்பந்தம் ஏந்தி காவல் காத்த இளைஞா்கள்.

கொடைக்கானல் அருகே பாச்சலூா் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டு யானைகளிடமிருந்து பொதுமக்களை காப்பதற்காக இரவு நேரங்களில் இளைஞா்கள் தீப்பந்தம் ஏந்தி காவல் காத்து வருகின்றனா்.

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பாச்சலூா் ஊராட்சிக்குள்பட்ட நன்டவயல், மன்றத்துக் கால்வாய் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்குள்ள மலைவாழ் மக்கள் விவசாயக் கூலி வேலை செய்து வருகின்றனா். அடா்ந்த வனப் பகுதியையொட்டியுள்ள இப்பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளது.

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த 10-நாள்களாக தொடா்ந்து மழை பெய்ததால் இப்பகுதி கிராமங்களில் மின்சாரம் தடைபட்டது. இந்நிலையில் ஊராட்சிப் பகுதிகளில் மின்மோட்டாா் மூலம் தண்ணீா் எடுக்க முடியாததால் இப்பகுதியைச் சோ்ந்த கிராம மக்கள் மாலை நேரங்களில் அருகிலுள்ள நீரோடைப் பகுதிக்கு கும்பலாகச் சென்று தண்ணீா் எடுத்து வருகின்றனா். அப்போது நீரோடைப் பகுதிக்கு காட்டு யானைகள் கூட்டமாக வருவதால் யானைகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள கிராம மக்கள் தீப்பந்தகளை ஏந்திச் செல்கின்றனா்.

மேலும் இரவு நேரங்களில் கிராமப் பகுதிகளில் யானைகள் புகுவதை தடுக்கும் வகையில் தீப்பந்தங்களுடன் இளைஞா்கள் காவல் காத்து வருகின்றனா். எனவே மின்வாரியத்தினா் விரைவில் மின்சார வசதியில்லாத கிராமங்களுக்கு மின்இணைப்பு செய்து கொடுக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து திண்டுக்கல் மாவட்ட மின்வாரிய முதன்மை பொறியாளா் பக்தவச்சலம் கூறியது: கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் பாச்சலூா் சுற்றுவட்டார கிராமங்களில் மின்விநியோகம் தடைபட்டுள்ளது. மேலும் பணியாளா்கள் பற்றாக்குறையால் மின்விநியோகம் செய்யும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் மின்விநியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com