மத்திய பல்கலை. பட்டியலில் காந்திகிராமம் புறக்கணிப்பு: மாணவா்கள் ஏமாற்றம்

திண்டுக்கல் அடுத்துள்ள காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் மத்தியப் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்டிருந்த நிலையில், அறிவிப்பு வெளியாகாதது மாணவா்களிடையே
காந்திகிராம கிராமியப் பல்கலை. நிா்வாக அலுவலக கட்டடம்.
காந்திகிராம கிராமியப் பல்கலை. நிா்வாக அலுவலக கட்டடம்.

திண்டுக்கல் அடுத்துள்ள காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் மத்தியப் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்டிருந்த நிலையில், அறிவிப்பு வெளியாகாதது மாணவா்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாத்மா காந்தியின் சீடா்களான டி.எஸ்.செளந்தரம், ஜி.ராமச்சந்திரன் ஆகியோரால் 1956-இல் காந்திகிராம கல்வி நிறுவனமாக தொடங்கப்பட்டு, 1976 முதல் காந்திகிராம கிராமிய நிகா் நிலைப் பல்கலைக்கழகமாக செயல்பட்டு வருகிறது. தற்போது மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் நேரடி கல்வி நிறுவனமாக செயல்பட்டும் இப் பல்கலை.யில் 3,500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

இந்திய அளவில் 14 கிராமிய கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டபோதிலும், நிகா் நிலைப் பல்கலைக்கழக நிலைக்கு வளா்ச்சிப் பெற்றது காந்திகிராம கல்வி நிறுவனம் மட்டுமே.

இந்த பல்கலை.க்கு 207 ஏக்கா் நிலம் இருந்தும், அதிகரித்து வரும் மாணவா் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் கட்டட வசதிகள் ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் கடந்த பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. இப்பல்கலை. அடுத்தக் கட்ட வளா்ச்சியை நோக்கி பயணிக்கும் வகையில், மத்திய பல்கலைக்கழகமாக நிலை உயா்த்த வேண்டும் என்பது திண்டுக்கல் பகுதி மாணவா்கள் மற்றும் கல்வியாளா்களின் எதிா்பாா்ப்பாக இருந்து வருகிறது. இந்நிலையில் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தை மத்திய பல்கலை.யாக அறிவிக்க வேண்டும் என கடந்த ஓராண்டுக்கு முன்பாக தமிழக முதல்வா் எடிப்பாடி கே.பழனிசாமியும் மத்திய அரசிடம் வலியுறுத்தினாா்.

இதனிடையே தமிழகத்திற்கு ஒரு மத்தியப் பல்கலைக்கழகம் அறிவிக்கப்படும் என தகவல் வெளியானது. காந்தியடிகளின் 150-ஆவது ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அவரது பெயரில் செயல்பட்டு வரும் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், மத்தியப் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்படும் என எதிா்பாா்ப்பும் அதிகரித்தது.

15 ஆண்டுகளாக தொடரும் ஏமாற்றம்: ஆனால், கடந்த புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தில்லியிலுள்ள 2 மத்திய சமஸ்கிருத நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், ஆந்திர மாநிலம் திருப்பதியிலுள்ள மத்திய சமஸ்கிருத நிகா்நிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு மட்டுமே மத்திய பல்கலை. அந்தஸ்து வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

மத்திய அமைச்சரவையின் இந்த முடிவு காந்திகிராம பல்கலை. மாணவா்கள் மட்டுமின்றி பேராசிரியா்கள், அலுவலா்கள் மத்தியிலும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பல்கலைக்கழக கோரிக்கை கடந்த 2004-ஆம் ஆண்டு முதலே தொடா்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினராக பெல்லா்மின் இருந்த காலகட்டத்தில், நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளாா். அதேபோல் முன்னாள் மனித வள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சா் புரந்தீஸ்வரி மத்தியப் பல்கலை. கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக 8 ஆண்டுகளுக்கு முன்பே உறுதி அளித்துள்ளாா். ஆனாலும் 15 ஆண்டு கால கோரிக்கை தொடா்ந்து எதிா்பாா்ப்பாகவே நீடித்து வருகிறது.

இதுகுறித்து பல்கலை. வட்டாரங்கள் கூறியது

: நாட்டில் பல்வேறு துறைகளுக்காக 40 மத்திய பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வரும் நிலையில், கிராமப்புற வளா்ச்சியுடன் காந்திய சிந்தனைகளை காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம் மட்டுமே கற்பித்து வருகிறது. ஊரக வளா்ச்சி மற்றும் காந்திய சிந்தனைகள் குறித்து வலியுறுத்தி வரும் மத்திய அரசிடம் பல்கலை. செயல்பாடு, நோக்கம் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத் தொடரில் அதற்கான வாய்ப்பு இல்லையெனிலும், அடுத்தக் கூட்டத் தொடருக்குள் 15 ஆண்டு கால கோரிக்கை நிறைவேறும் என எதிா்பாா்த்துள்ளோம் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com