"பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டம்': திண்டுக்கல்லில் 100 விவசாயிகளுக்கு ரூ. 2 ஆயிரம்
By DIN | Published On : 25th February 2019 07:33 AM | Last Updated : 25th June 2020 06:40 PM | அ+அ அ- |

விவசாயிகளுக்கு கௌரவ ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் 100 பேருக்கு அதற்கான சான்றிதழ் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முதல் தவணையாக ரூ. 2 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மட்டுமின்றி, வட்டார வேளாண்மை அலுவலகங்களிலும் இதற்கான விழா நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வீ.மனோகரன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் போது, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 100 விவசாயிகளுக்கு முதல்கட்டமாக ரூ.2 ஆயிரத்தை வங்கி கணக்கில் செலுத்துவதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து ஆட்சியர் டி.ஜி.வினய் பேசுகையில், இத்திட்டத்தின்கீழ் பயன் பெற தகுதியான அனைத்து விவசாயிகளையும் சேர்ப்பதற்காக பிப்ரவரி 25 முதல் பிப்ரவரி 27 ஆம் தேதி வரை 3 நாள்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இம்முகாமில் தகுதியானவர்கள் விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம். ஒரு காகிதத்தில், விவசாயியின் பெயர், முகவரி, நிலத்தின் சர்வே எண், வங்கிக் கணக்கு எண், செல்லிடப்பேசி எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் குறிப்பிட்டு வழங்கினால் போதுமானது என்றார். விழாவில் கலந்து கொண்ட அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் அனைவருக்கும், வத்தலகுண்டு தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்தின் சார்பில் இலவசமாக நீராபானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தோட்டக்கலை துணை இயக்குநர்(பொ) ஏ.சீனிவாசன், வேளாண்மை துணை இயக்குநர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல், திண்டுக்கல் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 50 விவசாயிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது, நிதி உதவித் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ள விவசாயிகள் 5 பேருக்கு உதவி இயக்குநர் நா.வெ.நாகேந்திரன் அதற்கான சான்றிதழை வழங்கினார்.