"அரசு அலுவலர்களை நம்பி வரும் பொதுமக்களை அலட்சியப்படுத்துவது தவறு'

பல்வேறு பிரச்னைகளின் தீர்வுக்காக அரசு அலுவலர்களை நம்பி வரும் பொதுமக்களை அவர்கள் அலட்சியப்படுத்துவது

பல்வேறு பிரச்னைகளின் தீர்வுக்காக அரசு அலுவலர்களை நம்பி வரும் பொதுமக்களை அவர்கள் அலட்சியப்படுத்துவது தவறு என திண்டுக்கல் மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள திண்டுக்கல் மாவட்ட முன்னாள் ஆட்சியர் டி.ஜி.வினய்க்கு அனைத்து துறை அலுவலர்கள் சார்பில் பிரிவு உபசார விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. பின்னர், மாவட்ட ஆட்சியர் பேசியதாவது: அரசுத் துறை அலுவலர்கள், எதிலும் எப்போதும்  பிறரை சார்ந்திருக்கக் கூடாது. 
அரசுப் பணிக்கு வந்த பின் அதற்கு தகுதியானவராக, தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும். பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வரும் பொதுமக்களை அலைக்கழிப்பதும், அலட்சியப்படுத்துவதும் தவறு. 
சிறுவாட்டுக் காடு, தாழைக்கிடை போன்ற மலை கிராமங்களுக்கு, அலுவலர்கள் முயற்சித்திருந்தால் பல ஆண்டுகளுக்கு முன்பே மின்சாரம் கிடைத்திருக்கும். அரசுப் பணியாளர்கள் நேரம் காலம் பார்க்காமல் உழைக்க முன்வருவதோடு, மக்களின் கோரிக்கைகளை புறக்கணிக்காமல் அதனை நிறைவேற்றுவதை கடமையாக கருத வேண்டும். திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வரும் நீர்நிலை மீட்புப் பணிகளை தொடரவும், மீட்கப்பட்ட நீராதாரங்களைப் பாதுகாக்கவும் அரசு அலுவலர்கள் துணை நிற்க வேண்டும் என்றார்.
திரண்டு வந்த விவசாயிகள்: ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பணியிட மாறுதல் உத்தரவை திரும்ப பெறக் கோரி கோஷமிட்டனர். இதனை அடுத்து அவர்களை ஆட்சியர் சமாதானப்படுத்தினார். 
பின்னர், நீலமலைக்கோட்டையைச் சேர்ந்த விவசாயிகள், தங்கள் பகுதி மக்களுக்கு  இன்றைக்கு தண்ணீர் கிடைப்பதற்கு காரணமாக இருந்துள்ளீர்கள் என நன்றி தெரிவித்து, குத்து விளக்கு பரிசளித்தனர். 
முன்னதாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆலமரம், புங்கை உள்ளிட 3 மரக்கன்றுகளை நடவு செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com