ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஜூலை 17 முதல் கொப்பரை கொள்முதல்: ஏக்கருக்கு 191 கிலோ விற்பனை செய்யலாம்

பழனி,  நத்தம் மற்றும் வத்தலகுண்டு ஒழுங்குமுறை விற்பனைக்  கூடங்களில் ஜூலை  17ஆம் தேதி முதல் கொப்பரை கொள்முதல் செய்யப்படும் என்றும், ஒரு விவசாயி ஏக்கருக்கு அதிகபட்சமாக 191 கிலோ மட்டுமே


பழனி,  நத்தம் மற்றும் வத்தலகுண்டு ஒழுங்குமுறை விற்பனைக்  கூடங்களில் ஜூலை  17ஆம் தேதி முதல் கொப்பரை கொள்முதல் செய்யப்படும் என்றும், ஒரு விவசாயி ஏக்கருக்கு அதிகபட்சமாக 191 கிலோ மட்டுமே விற்பனை செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
       இது தொடர்பாக, திண்டுக்கல் மாவட்ட வேளாண் விற்பனைக் குழு செயலர் மு.வே. சந்திரசேகர் தெரிவித்துள்ளது: திண்டுக்கல் மாவட்டத்தில் 30,498 ஹெக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி நடைபெறுகிறது. இதன்மூலம், 3.58 லட்சம் மெட்ரிக் டன் தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில், 3,40,977  மெட்ரிக் டன் விற்பனை உபரி ஏற்படுகிறது.
      தற்போது, தேங்காய் பருப்பு வெளிச்சந்தையில் குவின்டால் ஒன்றுக்கு ரூ.8,200 முதல் ரூ.8,500 வரை  கொள்முதல் செய்யப்படுகிறது. வெளிச்சந்தை விலையானது, மத்திய அரசால் அவ்வப்போது நிர்ணயம் செய்யப்பட்டு வரும் குறைந்தபட்ச ஆதார விலையை விட குறைவாக இருப்பதால், தமிழக அரசு மத்திய அரசின் உதவியுடன் தென்னை அதிகம் பயிரிடக்கூடிய 20 மாவட்டங்களில் அரவை கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக குவின்டாலுக்கு ரூ.9,521 வீதம் விலை நிர்ணயித்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, நத்தம் மற்றும் வத்தலகுண்டு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொள்முதல் மையங்கள் ஜூலை முதல் 6 மாதங்களுக்கு செயல்பட உள்ளன.
       கொள்முதலுக்கு அரவை கொப்பரை கொண்டு வரும் விவசாயிகள், நில உரிமைக்கான அசல் சிட்டா மற்றும் அடங்கலும், ஆதார் மற்றும் வங்கிக் கணக்கு புத்தகத்தின் நகலுடனும் வரவேண்டும். மேலும், அரவை கொப்பரையின் ஈரப்பதமானது 6 சதவீதத்துக்கு குறைவாகவும், பூஞ்சானம் மற்றும் சுருக்கம் நிறைந்த கொப்பரைகள் எண்ணிக்கையில் 10 சதவீதத்துக்கு குறைவாகவும், அயல் பொருள்கள் மற்றும் சில்லுகள் 10 சதவீதத்துக்கு குறைவாகவும் இருக்க வேண்டும் என, தரக் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
      ஒரு விவசாயியிடமிருந்து ஏக்கருக்கு அதிகபட்சமாக 191 கிலோ மட்டும் கொள்முதல் செய்யப்படும். கொள்முதல் செய்யும் பணி ஜூலை 17ஆம் தேதி(புதன்கிழமை) முதல் தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com