கொடைக்கானலில் வனப்பாதுகாப்பு: விழிப்புணர்வு ஊர்வலம்; புகைப்படக் கண்காட்சி
By DIN | Published On : 02nd March 2019 07:37 AM | Last Updated : 02nd March 2019 07:37 AM | அ+அ அ- |

கொடைக்கானலில் தனியார் கல்லூரி சார்பில் வனப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் புகைப்பட கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பழனி ஸ்ரீசுப்பிரமணிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி சார்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. கொடைக்கானல் ஏரிச்சாலையில் உள்ள கலையரங்கம் பகுதியில் தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்தை டி.எஸ்.பி.பொன்னுச்சாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சன் அரிமா சங்கத் தலைவர் டி.பி.ரவீந்திரன் முன்னிலை வகித்தார். பள்ளி மாணவர்கள், வனத்துறையினர், ரோட்டரி சங்க நிர்வாகிகள், அரிமா சங்க நிர்வாகிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஏரிச்சாலை, அண்ணாசாலை, நகராட்சி சாலை, பேருந்து நிலையப்பகுதி வழியாக உட்வில் சாலையிலுள்ள தனியார் பள்ளியில் ஊர்வலம் நிறைவடைந்தது.
அதைத்தொடர்ந்து, அங்கு "வனத்தையும், வனவிலங்குகளையும் காப்பது, மண் அரிப்பை தடுப்பது' போன்றவை குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு வனம், வன விலங்குகள் குறித்த ஓவியப் போட்டி நடைபெற்றது. இதேபோல், பள்ளியில் உள்ள அரங்கில் வனவிலங்குகளின் புகைப்படங்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள் பேப்பர் மற்றும் பல்வேறு பொருள்களால் ஆன வன விலங்குகளின் உருவங்களை பார்வைக்கு வைத்திருந்தனர். முன்னதாக கல்லூரி முதல்வர் நந்தகுமார் வரவேற்றார்.
இவ்விழாவானது இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.