பழனி மலைக் கோயிலில் சிறப்பு பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் ஆய்வு

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, சென்னை சிறப்பு பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு  மேற்கொண்டனர்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, சென்னை சிறப்பு பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு  மேற்கொண்டனர்.
      சமீபத்தில், இலங்கையில் வழிபாட்டுத் தலங்களிலும், விடுதிகளிலும் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக, தமிழகத்தின் பல்வேறு கோயில்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 
     அதன்படி, திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலிலும் போலீஸார் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட நவீன கருவிகள் மூலம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். படி வழிப்பாதை, ரோப்கார், மின் இழுவை ரயில்,  மலைக் கோயில் உள்ளிட்ட பல இடங்களிலும் பக்தர்கள் கொண்டு வரும் பைகள், அபிஷேகப் பொருள்கள் உள்ளிட்டவற்றை தீவிர பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கின்றனர்.
     இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், திருக்கோயிலில் பாதுகாப்புப் பணிகள் குறித்து சென்னை சிறப்பு பாதுகாப்புப் பிரிவு டி.எஸ்.பி. வசந்தன் மற்றும் நுண்ணறிவுப் பிரிவு காவல் அதிகாரிகள் என ஏராளமானோர் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.       திருக்கோயில் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள இடங்களில் காலை, மாலை நேரங்களில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் உள்ளனரா, கூடுதலான இடங்கள் மற்றும் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணிக்கு தேவைப்படுகின்றனரா என இந்த குழு ஆய்வு செய்தது. மேலும், மலைக் கோயிலுக்குச் செல்ல வேறு வழிகள் ஏதேனும் உள்ளதா என்பதையும் குழுவினர் ஆய்வு செய்தனர்.
      காலையில் ஆய்வுப் பணிகளும், பிற்பகலில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், டி.எஸ்.பி. விவேகானந்தன், பழனி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொறுப்பு) செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர். இதில், திருக்கோயில் அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
     பாதுகாப்பு குறித்த அறிக்கை, தமிழக முதல்வருக்கு அனுப்பப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com