கமல்ஹாசன் பிரசாரத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 15th May 2019 06:55 AM | Last Updated : 15th May 2019 06:55 AM | அ+அ அ- |

தமிழகத்தில் மத மோதல்களை உருவாக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசி வரும் நிலையில், அவரது பிரசாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூருக்கு செவ்வாய்க்கிழமை வந்த இந்து முன்னணி அமைப்பின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் வி.எஸ்.செந்தில்குமார் தெரிவித்ததாவது:
அமைதியாக இருக்கும் தமிழகத்தில், மத மோதல்களை உருவாக்கும் முயற்சியில் கமல்ஹாசன் ஈடுபட்டு வருகிறார். சுதந்திர இந்தியாவில் முதல் பயங்கரவாதி இந்து எனகுற்றம்சாட்டியுள்ள கமல், தமிழகத்தில் இந்து இயக்கங்களைச் சேர்ந்த 60 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட போதும், தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தபோதும் தனது கண்டனத்தை ஏன் பதிவு செய்யவில்லை.
அரசியல் கட்சித் தொடங்கியுள்ள நிலையில், வாக்கு வங்கிக்காக இதுபோன்ற தரம் தாழ்ந்த கருத்துகள் மூலம் அடையாளம் தேட முயற்சிக்கிறார். கமலுக்கு கொள்கையும், லட்சியமும் கிடையாது. சமூக அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கமல்ஹாசன், இனி பிரசாரம் செய்வதற்கு காவல் துறையும், தேர்தல் ஆணையமும் தடை விதிக்க வேண்டும்.
தமிழகத்தில் கமல் எங்கு பிரசாரத்தில் ஈடுபட முயன்றாலும், அந்த பகுதியில் இந்து முன்னணி சார்பில் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இந்து குறித்த கமல்ஹாசனின் கருத்துக்கு எதிராக காவல் துறை வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்ய வேண்டும் என்றார்.