மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீதான சந்தேகம்"அலுவலர்கள் கவனமுடன் செயலாற்ற வேண்டும்'

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது பல்வேறு சந்தேகங்கள் இருந்து வரும் நிலையில்,

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது பல்வேறு சந்தேகங்கள் இருந்து வரும் நிலையில், எவ்வித குளறுபடிகளுக்கும் இடமளிக்காத வகையில் வாக்கு எண்ணும் பணியில் அலுவலர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் வினய் அறிவுறுத்தினார்.
திண்டுக்கல் மக்களவைத் தேர்தல் மற்றும் நிலக்கோட்டை சட்டப்பேரவை இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி மே 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண்பார்வையாளர்களுக்கான வாக்கு எண்ணும் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான டி.ஜி.வினய் பேசியது: திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் 6 இடங்களில், தலா 14 மேஜைகள் அமைக்கப்பட்டு அதிகபட்சம் 23 சுற்றுகளில் எண்ணப்பட உள்ளன. அந்தந்த வாக்குச் சாவடிக்கான வாக்குப் பதிவு கட்டுப்பாட்டு கருவி மற்றும் அதற்கான 17 சி படிவம் ஆகியவை வழங்கப்படும். படிவம் 17-சி யில் குறிப்பிடும்போது, அலுவலர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். 
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்து பல்வேறு சந்தேகங்கள் இருக்கும்பட்சத்தில், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள், வெளிப்படைத் தன்மையுடன் அனைத்து நடவடிக்கைகளையும் வேட்பாளர்களின் முகவர்களின் ஒப்புதலுடன் (கையொப்பம் பெற்று) செயல்பட வேண்டும். வாக்குப் பதிவு இயந்திரம் தொடர்பான சந்தேகங்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மட்டுமே விவாதிக்க வேண்டும். 
ஒப்புகை சீட்டே இறுதியானது:  வாக்குப் பதிவு கருவி மற்றும் "விவிபேட்' இயந்திரத்திலுள்ள ஒப்புகை சீட்டுகள் எண்ணும் போது, 2-க்கும் வேறுபாடு இருந்தால் ஒப்புகை சீட்டுகளை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். 
56-டி படிவம்: வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளர்களின் முகவர்கள் தரப்பில் வாக்குப் பதிவு கருவி, "விவிபேட்' கருவி உள்ளிட்டவை குறித்து குற்றச்சாட்டு  முன் வைக்கப்பட்டால்,  அந்த புகார்களை படிவம் 56-டி யில் எழுத்துப்பூர்வமாக வழங்க வேண்டும் என அறிவுறுத்த வேண்டும். 23 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிந்த பின், "விவிபேட்' கருவிகளிலுள்ள வாக்குப் பதிவு ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும். 
வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு மே 23 ஆம் தேதி காலை 5 மணிக்கு எந்தெந்த இடத்தில் பணி என்பது ஒதுக்கீடு செய்யப்படும். காலை 7 மணிக்குள் அனைத்து அலுவலர்களும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரி வளாகத்திற்குள் வந்துவிட வேண்டும் என்றார். 
பயிற்சி வகுப்பில் மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு, பழனி சார் ஆட்சியர் அருண்ராஜ், திண்டுக்கல் கோட்டாட்சியர் இரா.ஜீவா மற்றும் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடவுள்ள 400-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அலுவலர்கள் வெளியேற்றம் 
பயிற்சி முகாமில் மாவட்ட தேர்தல் அலுவலர் டி.ஜி.வினய் மேலும் பேசியது: வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு சுற்றுக்கும், 2 வாக்குப் பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டு, "விவிபேட்' கருவியிலுள்ள ஒப்புகை சீட்டுகளுடன் தேர்தல் பார்வையாளர்கள் மூலம் ஆய்வு செய்யப்படும். அப்போது, வேறுபாடுகள் மற்றும் குறைகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் அலுவலர்கள் வெளியேற்றப்பட்டு, மாற்று அலுவலர்கள் மூலம் மீண்டும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடத்தப்படும்.  மேலும், அந்த மேஜையில் எண்ணப்பட்ட வாக்குகள் மீண்டும் எண்ணப்படும். 
ஒப்புகைச் சீட்டுகளை பொறுத்தவரை, ஒவ்வொரு தொகுதிக்குள்பட்ட மொத்த வாக்குச் சாவடிகளின் எண்களையும் எழுதி, குலுக்கல் முறையில் அதிலிருந்து 5 வாக்குச் சாவடிகளை தேர்வு செய்து எண்ணப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com