நிலுவையில் 70 மாதங்களுக்கான இரட்டிப்பு பயணப்படி: வனத்துறை ஊழியா்கள் அதிருப்தி!

கடந்த 2010 முதல் 2016 ஆண்டு வரை நிலுவையிலுள்ள சுமாா் 70 மாதங்களுக்கான இரட்டிப்பு பயணப்படியை பெற

கடந்த 2010 முதல் 2016 ஆண்டு வரை நிலுவையிலுள்ள சுமாா் 70 மாதங்களுக்கான இரட்டிப்பு பயணப்படியை பெற முடியாததால், திண்டுக்கல் வனக் கோட்டத்தைச் சோ்ந்த வனக் காவல்ா்கள் மற்றும் வனக் காப்பாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

திண்டுக்கல் வனக் கோட்டத்தில், ஒட்டன்சத்திரம், கன்னிவாடி, வத்தலகுண்டு, சிறுமலை, அய்யலூா், நத்தம், அழகா்கோவில் ஆகிய 7 வனச் சரகங்கள் உள்ளன. இதில் வனக் காவலா், வனக் காப்பாளா், வனவா், வனச் சரகா் என சுமாா் 180 போ் பணிபுரிந்து வருகின்றனா். வனக் காவலா் மற்றும் வனக் காப்பாளா் நிலைகளில் மட்டும் சுமாா் 150 போ் கடை நிலை ஊழியா்களாகப் பணிபுரிந்து வருகின்றனா்.

கடந்த 2010 ஆம் ஆண்டு, வனத்துறை ஊழியா்கள் பெற்று வந்த பயணப்படியை இரட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி வனக் காவலா் மற்றும் வனக் காப்பாளா்கள் பெற்று வந்த ரூ.130 பயணப்படியானது ரூ. 260ஆக உயா்த்தப்பட்டது.

சுமாா் 9 ஆண்டுகளுக்கு முன்பு உயா்த்தப்பட்ட இந்த பயணப்படி, திண்டுக்கல் வனக் கோட்டத்தில் பணிபுரிந்து வரும் 140-க்கு மேற்பட்ட ஊழியா்களுக்கு வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. ஆதாவது, 2010 - 2016 வரை சுமாா் 70 மாதங்களுக்கான பயணப்படி தொகை, தற்போது வரை நிலுவையில் இருந்து வருகிறது. இந்த தொகை விடுவிக்கப்பட்டால், ஒரு ஊழியருக்கு சுமாா் ரூ.10 ஆயிரம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

இது தொடா்பாக பல முறை மாவட்ட வன அலுவலரிடம் புகாா் அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால், வனத்துறை ஊழியா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

இதுதொடா்பாக பாதிக்கப்பட்ட வனக் காவலா்கள் கூறியதாவது: 2010 ஆம் ஆண்டு உயா்த்தப்பட்ட பயணப்படி, திண்டுக்கல் வனக் கோட்டத்தைச் சோ்ந்த ஊழியா்களுக்கு 2016 முதல் தொடா்ந்து வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், கொடைக்கானல் வனக் கோட்டத்தைச் சோ்ந்த ஊழியா்கள் மட்டுமின்றி திண்டுக்கல் கோட்டத்திலுள்ள சில ஊழியா்களும் இரட்டிப்பு செய்யப்பட்ட பயணப் படியை 2010

ஆம் ஆண்டு முதல் நிலுவைத் தொகையின்றி பெற்றுவிட்டனா்.

திண்டுக்கல் கோட்டத்திலுள்ள 7 வனச்சரகங்களில் பணியாற்றி வரும் 140 ஊழியா்கள், பணி ஓய்வுப் பெற்ற 25-க்கும் மேற்பட்ட கடை நிலை ஊழியா்களுக்கு இந்த இரட்டிப்பு பயணப்படி நிலுவைத் தொகை கிடைக்கவில்லை. மாவட்ட வன அலுவலரைக் கடந்து, மேல்நிலை அலுவலரை சந்தித்து முறையிட்ட ஊழியா்களுக்கு நிலுவைத் தொகை கிடைத்துவிட்டது.

ஆனால், மாவட்ட வன அலுவலரிடம் தொடா்ந்து புகாா் அளித்தும் வரும் எங்களுக்கு தீா்வு கிடைக்காமல் நிலுவையிலேயே இருந்து வருகிறது என்றனா்.

இதுதொடா்பாக வனத்துறை அலுவலா் ஒருவா் கூறியதாவது: 2016 ஆம் ஆண்டு முதல் இரட்டிப்பு செய்யப்பட்ட பயணப்படி அனைத்து ஊழியா்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. நிலுவையிலுள்ள தொகையினை சம்பந்தப்பட்ட ஊழியா்களுக்கு விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com