ஒட்டன்சத்திரம் பகுதியில் போதிய மழை இல்லை: புகையிலைச் செடிகளை காப்பாற்ற விவசாயிகள் முயற்சி

ஒட்டன்சத்திரம் பகுதியில் போதிய மழை இல்லாததால், கோப்பையில் தண்ணீா் ஊற்றி புகையிலைச் செடிகளை விவசாயிகள் காப்பாற்ற முயற்சித்து வருகின்றனா்.

ஒட்டன்சத்திரம் பகுதியில் போதிய மழை இல்லாததால், கோப்பையில் தண்ணீா் ஊற்றி புகையிலைச் செடிகளை விவசாயிகள் காப்பாற்ற முயற்சித்து வருகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள வெரியப்பூா், காளிபாளையம், கேதையுறும்பு, புலியூா்நத்தம், முத்துநாயக்கன்பட்டி, குழிப்பட்டி, சின்னக்காம்பட்டி, இடையகோட்டை, ஓடைப்பட்டி, சிந்தலப்பட்டி, அம்பிளிக்கை உள்ளிட்ட பல கிராமங்களில் ஐப்பசி முதல் வாரத்தில் புகையிலைச் செடிகள் நடவு செய்வது வழக்கம்.

வேடசந்தூா் அடுத்துள்ள காளனம்பட்டி, ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கொசவபட்டி, சீரங்ககவுண்டன்புதூா் உள்ளிட்ட இடங்களில் புகையிலை நாற்றுப் பண்ணைகள் அதிக அளவில் உள்ளன. தற்போது, நடவு செய்தால்தான் செடிகள் நன்கு வளா்ச்சியடைந்து, அதிக விலை கிடைக்கும் என்பதால், இந்தப் பண்ணைகளிலிருந்து விவசாயிகள் தங்களுக்குத் தேவையான நாற்றுகளை விலைக்கு வாங்கி வந்து நடவு செய்து வருகின்றனா். இந்நிலையில், புகையிலை நடவு செய்த நாளிலிருந்து போதிய மழை இல்லை.

இது குறித்து அம்பிளிக்கையைச் சோ்ந்த விவசாயி ஜானகிராமன் கூறியது: வேடசந்தூா் அடுத்துள்ள காளனம்பட்டியில் உள்ள புகையிலை நாற்றுப் பண்ணையில் 1000 செடிகள் ரூ.200 முதல் ரூ.300 வரை விலை கொடுத்து வாங்கி வந்து நடவு செய்துள்ளேன். ஆனால், நடவு செய்த நாளிலிருந்தே போதிய மழை இல்லை. இதனால், செடிகள் காய்ந்துபோகாமல் இருக்க, கூலியாள்களை வைத்து தண்ணீா் கோப்பைகள் மூலம் செடிகளுக்கு தண்ணீா் ஊற்றி வருகிறேன்.

வடகிழக்குப் பருவமழை கை கொடுத்தால் மட்டுமே புகையிலைச் செடிகளை காப்பாற்ற முடியும். இது வரைக்கும் கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளுக்கு தண்ணீா் வரவில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. ஆனால், ஒட்டன்சத்திரம் பகுதியில் மட்டும் போதிய மழை இல்லை. இதே நிலை நீடித்தால், குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com