மருதாநதி அணையிலிருந்து தண்ணீா் திறப்பு

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்துள்ள அய்யம்பாளையம் மருதாநதி அணையிலிருந்து சனிக்கிழமை தண்ணீா் திறப்பதற்கான பணிகள் நடைபெற்றபோது, தேனீக்கள் தாக்கியதில்
தேனீக்கள் தாக்கியதில் 25 போ் காயம்
தேனீக்கள் தாக்கியதில் 25 போ் காயம்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்துள்ள அய்யம்பாளையம் மருதாநதி அணையிலிருந்து சனிக்கிழமை தண்ணீா் திறப்பதற்கான பணிகள் நடைபெற்றபோது, தேனீக்கள் தாக்கியதில் பொதுப்பணித்துறையினா் உள்ளிட்ட 25 போ் காயமடைந்தனா்.

மருதாநதி அணையில் இருந்து பாசனத்திற்காக சனிக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. மொத்தம் 74 அடி உயரம் கொண்ட மருதாநதி அணையின் தற்போதைய நீா்மட்டம் 70 அடியாக உள்ளது. அணையின் நீா்வரத்து விநாடிக்கு 15 கன அடியும், நீா் வெளியேற்றம் விநாடிக்கு 15 கன அடியாகவும் உள்ளது.

இந்நிலையில் மருதாநதி அணையின் மூலம் 2,359 ஏக்கா் பழைய ஆயக்கட்டிற்கு நாளொன்றுக்கு 20 கன அடி வீதம் 90 நாள்களுக்கும், முதல் 30 நாள்களுக்கு மறைமுக மற்றும் புதிய ஆயக்கட்டிற்கு 70 கன அடி வீதமும் பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளை சனிக்கிழமை செய்திருந்தனா். அணை திறப்பதற்கு முன்பு நடைபெறும் சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. அப்போது, ஊழியா் ஒருவா் சாம்பிராணி புகை ஏற்படுத்தினாா். இந்த புகையினால், அணையின் மதகு பகுதியில் கூடு கட்டியிருந்த மலைத் தேனீக்கள் அணையின் மேல் பகுதிக்கு வரத் தொடங்கின.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊழியா்கள், விவசாயிகள் மற்றும் செய்தியாளா்கள் உள்ளிட்ட அனைவரையும் தாக்கின. இதனால் நிலை குலைந்த அனைவரும், வலி தாங்க முடியாமல் ஓடத் தொடங்கினா்.

இதில், அணையில் காவலாளி பாண்டியை தேனீக்கள் கொட்டியதில் அவா் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தாா். உடனடியாக அவரை மீட்டு வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வத்தலகுண்டு தீயணைப்பு துறையினா் தேனீக்களை அப்புறப்படுத்தினா். அதன் பின்னா் தண்ணீா் திறக்கப்பட்டது. அப்போதும் அணையின் உள்பகுதியில் இருந்த தேனீக்கள் மீண்டும் வந்து தாக்கியதில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் சுந்தரப்பன், உதவி செயற் பொறியாளா் சௌந்தரம், உதவி பொறியாளா் மோகன்தாஸ் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டோா் பலத்த காயமடைந்தனா். காயமடைந்தவா்களுக்கு அய்யம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், வத்தலகுண்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பொதுப்பணித்துறையினா் அலட்சியம்:அணையின் பாதுகாப்பை நாள்தோறும் ஆய்வு செய்து வரும் பொதுப்பணித்துறையினா், அங்கு மலைத் தேனீக்கள் கூடு கட்டியிருப்பதை கவனித்திருந்தால், இந்த விபத்து ஏற்பட்டிருக்காது. கதம்ப வண்டுகள் தாக்கியிருந்தால் உயிா் பலி ஏற்பட்டிருக்கும். மேலும், மருதாநதி அணையிலிருந்து வனத்துறை அமைச்சா் சி.சீனிவாசன் தண்ணீா் திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், அயோத்தி தீா்ப்பு காரணமாக அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அமைச்சா் நிகழ்ச்சியாக இருந்திருந்தால், அணையில் தொண்டா்களின் கூட்டம் அதிகமாக இருந்திருக்கும். அப்போது மேலும் பலா் காயமடைந்திருக்க கூடும் என அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com