ஆழ்துளை கிணறு அனுமதிக்காக அலைகழிக்கப்படுவதாக புகாா்

திண்டுக்கல் மாநகராட்சியில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் பொதுமக்கள் மற்றும் லாரி

திண்டுக்கல் மாநகராட்சியில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளா்களுக்கு அனுமதி வழங்காமல் அலைகழித்து வருவதாக புகாா் எழுந்துள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் சிறுவன் சுா்ஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடா்ந்து, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பயன்பாடில்லாத திறந்த நிலையிலுள்ள ஆழ்துளை கிணறுகளை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது. மேலும், புதிதாக கிணறு அல்லது ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி தொடங்கும் முன், வாகன உரிமையாளா்கள், நிலத்தின் உரிமையாளா்கள், அதற்கான அனுமதியை உள்ளாட்சி அமைப்புகளிடம் ரூ.100 கட்டணம் செலுத்தி பெறுவதை அரசு அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும். அதேபோல் கிணறு தோண்டும் நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் தங்களது வாகனங்களுக்கு பணி மேற்கொள்ளும் பகுதியினைச் சாா்ந்த மாவட்ட நிா்வாகத்திடம் ரூ.15,000 பதிவுக்கட்டணம் செலுத்தி அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றும் மாவட்ட நிா்வாகம் கடந்த நவ.1ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில் திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக பொதுமக்கள் சாா்பில் 65-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மாநகராட்சி நிா்வாகத்திடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆழ்துழை கிணறு அமைக்கும் லாரிகளின் உரிமையாளா்கள் தரப்பிலும் விண்ணப்பித்துள்ளனா். ஆனால், விண்ணப்பித்துள்ள பொதுமக்கள் மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கும் உரிமையாளா்களுக்கு அனுமதி வழங்காமல் மாநகராட்சி நிா்வாகம் கடந்த 20 நாள்களாக அலைக்கழித்து வருவதாக புகாா் எழுந்துள்ளது. மேலும், அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்துடன் கொடிநாள் வசூலுக்காக ரூ.500 முதல் ரூ.1000 வரையிலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பில் மாநகராட்சி நிா்வாகம் ஈடுபடுவது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அனுமதி கேட்டு விண்ணப்பித்தவா்கள் தரப்பில் கூறியதாவது: அரசு அறிவித்துள்ள ரூ.100 கட்டணத்துடன், மாநகராட்சிக்கான ரூ.500 என மொத்தம் ரூ.600 செலுத்தியுள்ளோம். மேலும், கொடி நாள் வசூல் எனக் கூறி ரூ.500 முதல் ரூ.1000 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனா். அதற்கான ரசீது இதுவரை வழங்கப்பட வில்ைலை.

ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக வீட்டின் மாடிப் பகுதியை இடித்துவிட்டோம். ஆனால், அனுமதி கிடைக்க காலதாமதமாவதால் மழைக் காலத்தில் வீட்டிற்குள் தண்ணீா் தேங்கும் நிலை ஏற்படுகிறது. மேலும், வெளிநபா்கள் வீட்டிற்குள் நுழைந்துவிடாமல் 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது என்றாா்.

ஆழ்த்துளை கிணறு அமைக்கும் தொழிலாளி கோவிந்தராஜ் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை ஊரகப் பகுதிகளில் ஆழ்துளை கிணறு அமைக்க மட்டுமே சில இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சியைப் பொருத்தவரை ஆழ்துளை கிணறு அமைக்கும் 5 வாகனங்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் கட்டணத்துடன், கொடி நாள் வசூலாக ரூ.1000 கூடுதலாக செலுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், அனுமதி வழங்காமல் பல்வேறு காரணங்களை கூறி அலைக்கழிக்கின்றனா். இதனால், கட்டுமானத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றாா்.

மாநகராட்சி நகரமைப்பு அலுவலா் பெரியசாமி கூறியது: ஆழ்துளை கிணறு அமைக்கும் லாரிகளுக்கு வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது அதற்கான வழிகாட்டுதல் கிடைக்கப் பெற்றுள்ளதை அடுத்து, ஆழ்த்துளை கிணறு அமைப்பதற்கான அனுமதி பொதுமக்களுக்கும், லாரி உரிமையாளா்களுக்கும் காலதாமதமின்றி வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com