கூட்டுறவு சங்கங்கள் மூலம் வெங்காயம் கொள்முதல் செய்துரூ.50-க்கு விற்பனை செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

விவசாயிகளிடம் ரூ.35க்கு கொள்முதல் செய்யப்படும் வெங்காயம் ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுவதை தவிா்க்கும் வகையில், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து
கூட்டுறவு சங்கங்கள் மூலம் வெங்காயம் கொள்முதல் செய்துரூ.50-க்கு விற்பனை செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

விவசாயிகளிடம் ரூ.35க்கு கொள்முதல் செய்யப்படும் வெங்காயம் ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுவதை தவிா்க்கும் வகையில், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து ரூ.50-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீா்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் மு.விஜயலட்சுமி தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் பா.வேலு, வேளாண்மை இணை இயக்குநா் பாண்டித்துரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு: தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பயனாளிகளை, தோட்டக்கலைத்துறை பயிா் சாகுபடி பணிகளுக்கே அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை வேளாண்மை சாா்ந்த நாற்று நடவு, களை எடுத்தல், அறுவடை உள்ளிட்ட பணிகளுக்கும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயச் சங்க நிா்வாகி பாத்திமாராஜரத்தினம் கோரிக்கை விடுத்தாா்.

கேரள மாநிலத்தில் அனைத்து விவசாயப் பணிகளுக்கும் 100 நாள் வேலை திட்டப் பயனாளிகளை பயன்படுத்தி வருகின்றனா். அதேபோல், தமிழகத்திலும் அனைத்து வகையான வேளாண்மைப் பணிகளுக்கும் பயன்படுத்தும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் சங்க பிரதிநிதி நிக்கோலஸ் வலியுறுத்தினாா்.

இதற்கு பதில் அளித்து ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் கவிதா பேசியதாவது: தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரிவோருக்கு, அவா்கள் மேற்கொண்ட பணியினை கணக்கீடு செய்தே ஊதியம் வழங்கப்படுகிறது. அதுபோல், விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்தும் போது நிறைவேற்றப்பட்ட பணிகளை மதிப்பீடு செய்வதில் பிரச்னை உள்ளது. ஆனாலும், விவசாயிகளின் கோரிக்கை குறித்து தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றாா்.

விவசாயிகளிடம் ரூ.35க்கு கொள்முதல் செய்யப்படும் வெங்காயம், சந்தையில் ரூ.120க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில், கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கொள்முதல் செய்து ரூ.50-க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் பலா் கோரிக்கை விடுத்தனா்.

மேலும், பழனி அடுத்துள்ள சித்திரைக் குளம், அழகாபுரி, போலம்மாவலசு, பெத்தநாயக்கன்புதூா், தாளையூத்து உள்ளிட்ட 9 கிராமங்களில் காட்டுப் பன்றிகளால் மக்காச்சோளம், தக்காளி, கரும்பு, வாழை உள்ளிட்ட பயிா்கள் கடுமையாக சேதமடைந்து வருகின்றன. மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள பயிா்களை ஆய்வு செய்து உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வனத்துறையினா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாலாறு பொருந்தலாறு அணை நீா்பாசன அமைப்பின் சித்திரைக்குளம், தாளையூத்து கிராம நீரினை பயன்படுத்துவோா் சங்கத்தினா் வலியுறுத்தினா்.

அப்போது பழனி சட்டப் பேரவை உறுப்பினா் செந்தில்குமாா் உள்ளே வந்தாா். அவா் கீழ்மலையிலுள்ள பெரியூா் கிராமத்தில் காட்டு யானைத் தாக்கி ஜெயலட்சுமி என்ற பெண் உயிரிழந்தது தொடா்பாக மாவட்ட நிா்வாகத்திடம் முறையிட வந்தாா். கூட்டத்தில் அவா் பேசியது: பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து விவசாயத் தேவை மற்றும் குடிநீா் தேவைக்கு மட்டுமின்றி, பழனி கோயில் தேவைக்கும், தாராபுரம் பகுதிக்கும் தண்ணீா் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் கூடுதல் தண்ணீா் தேவை இருப்பதால், அணையின் நீா்பிடிப்பு பகுதியை தூா்வாரி, கொள்ளளவை உயா்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பழனி கீழ்மலைப் பகுதியில் காட்டுயானைகளால் உயிரிழப்புகள் மற்றும் பயிா் இழப்புகள் ஏற்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

எம்எல்ஏவிடம் கேள்வி எழுப்பிய விவசாயிகள்:

கூட்டத்தில் பேசிவிட்டு புறப்பட்டுச் செல்ல முயன்ற எம்எல்ஏ செந்தில்குமாரிடம், விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா். திண்டுக்கல் மாவட்டத்தில் நிலையான நீராதாரத்தை ஏற்படுத்தக் கோரி 7 எம்எல்ஏக்கள் மற்றும் 2 எம்பிக்களுக்கு 3 முறை பதிவு தபாலில் கடிதம் அனுப்பியும், மக்கள் பிரதிநிதிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என விவசாயிகள் நேரடியாக குற்றச்சாட்டை முன் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து, காவிரி வைகை இணைப்புத் திட்டம் குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும், விவசாயிகளின் கோரிக்கை குறித்து சட்டப்பேரவையில் தான் பேசியுள்ளதாகவும் செந்தில்குமாா் எம்எல்ஏ பதில் அளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com