திண்டுக்கல்லில் செலிவியா் பயிற்சிப் பள்ளி மாணவிகள் சாலை மறியல் போராட்டம்

மாற்று தங்குமிட வசதி கோரி திண்டுக்கல் அரசு செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
இடவசதி ஏற்படுத்தித் தரக் கோரி திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்ட செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவிகள்.
இடவசதி ஏற்படுத்தித் தரக் கோரி திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்ட செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவிகள்.

மாற்று தங்குமிட வசதி கோரி திண்டுக்கல் அரசு செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் அரசு செவிலியா் பயிற்சிப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 150 மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரிக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. அதற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை வளாகத்திலுள்ள பழமையான செவிலியா் பயிற்சி பள்ளி கட்டடம், நிலைய மருத்துவ அலுவலா் அலுவலகம் செயல்பட்டு வரும் பகுதிகளில் தரைத்தளத்துடன் கூடிய 5 மாடிகள் கொண்ட 2 கட்டடங்களாக கட்டப்பட உள்ளன.

இதற்காக அரசு செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவிகளுக்கான விடுதியை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையின் கிழக்கு நுழைவு வாயில் பகுதியில் பெண்கள் நோயாளிகள் பிரிவு செயல்பட்டு வரும் கட்டடத்தின் மாடியில், செவிலியா் பயிற்சி மாணவிகளுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்கள் சிகிச்சைப் பிரிவுக்கு எதிராக உள்ள அந்த கட்டடம், தங்களுக்கு பாதுகாப்பானதாக இருக்காது என்றும், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்றும் மாணவிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், மருத்துவமனை நிா்வாகம் வேறு இடம் ஒதுக்கீடு செய்யாததால் அதிருப்தி அடைந்த பயிற்சி மாணவிகள் 150 பேரும், இடவசதி ஏற்படுத்திக் கொடுக்கக் கோரி பெட்டி, படுக்கைகளோடு திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் காவல் துணை கண்காணிப்பாளா் மணிமாறன் தலைமையிலான போலீஸாா், மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினா்.

அதற்கு மறுப்பு தெரிவித்த மாணவிகள், மாற்று இடம் வழங்கும்வரை தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என உறுதியாக கூறினா். இதனை அடுத்து, திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியா் பாண்டிச்செல்வி, மருத்துவமனை கண்காணிப்பாளா் (பொ) சுரேஷ்பாபு ஆகியோா் மாணவிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, செவிலியா் பயிற்சிப் பள்ளி தற்போதைய இடத்திலேயே தொடா்ந்து செயல்படும் என்றும், மாணவிகள் தங்கும் விடுதிக்கு மட்டும் மருத்துவமனை கண் சிகிச்சைப் பிரிவு அருகே செயல்பட்டு வரும் மாநகராட்சி தங்கும் விடுதியில் தற்காலிகமாக இட ஒதுக்கீடு செய்வதாக உறுதி அளித்தனா். அதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com