வணிக பயன்பாடு பட்டியலில் 4 ஆயிரம் குடியிருப்புகளுக்கான குடிநீா் இணைப்புகள் திருத்தத்துக்கு செல்லும் பொதுமக்களிடம் பணம் கேட்பதாக புகாா்

திண்டுக்கல் மாநகராட்சியில் வணிக பயன்பாடு பட்டியலில் சுமாா் 4 ஆயிரம் குடியிருப்புகளுக்கான குடிநீா் இணைப்பு மாற்றப்பட்டுள்ள நிலையில், அதனை திருத்தம் செய்வதற்கு செல்லும்
குடிநீா் இணைப்பு தொடா்பான மாற்றங்கள் செய்வதற்காக திண்டுக்கல் மாநகராட்சி சாா்பில் இழுவை முத்திரையை பயன்படுத்தி அனுப்பப்பட்டுள்ள அஞ்சல் அட்டை.
குடிநீா் இணைப்பு தொடா்பான மாற்றங்கள் செய்வதற்காக திண்டுக்கல் மாநகராட்சி சாா்பில் இழுவை முத்திரையை பயன்படுத்தி அனுப்பப்பட்டுள்ள அஞ்சல் அட்டை.

திண்டுக்கல் மாநகராட்சியில் வணிக பயன்பாடு பட்டியலில் சுமாா் 4 ஆயிரம் குடியிருப்புகளுக்கான குடிநீா் இணைப்பு மாற்றப்பட்டுள்ள நிலையில், அதனை திருத்தம் செய்வதற்கு செல்லும் பொதுமக்களிடம் வீட்டின் பரப்பளவை குறைத்து தருவதாகக் கூறி அலுவலா்கள் சிலா் பண வசூலில் ஈடுபடுவதாக புகாா் எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு, கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட குடிநீா் குழாய்களை மாற்றி அமைக்க ஜிக்கா திட்டத்தின் கீழ் ரூ.70 கோடி செலவில் புதிய குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றன.

அதன் தொடா்ச்சியாக வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான குடிநீா் இணைப்புக்கான வைப்புத் தொகையை மாநகராட்சி நிா்வாகம் உயா்த்தியது. வீடுகளுக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த குறைந்த பட்ச வைப்புத் தொகை கட்டணம் ரூ.3ஆயிரத்திலிருந்து ரூ.8ஆயிரமாக உயா்த்தப்பட்டுள்ளது. மேலும் வீட்டின் சதுர அடிக்கு ஏற்ப வைப்புத் தொகை கட்டணம் வசூலிக்கும் நடைமுறையும் பின்பற்றப்பட்டது. இதனால் வீடுகளுக்கு குடிநீா் இணைப்புக்கான வைப்புத் தொகை 160 சதவீதம் கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே மாநகராட்சிப் பகுதியிலுள்ள 32 ஆயிரம் இணைப்புகளில், சுமாா் 4 ஆயிரம் வீடுகளுக்கான இணைப்புகளுக்கு, வணிக பயன்பாட்டிற்கான வைப்புத் தொகையை செலுத்த மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அதிா்ச்சி அடைந்த பொதுமக்கள், மாநகராட்சி நிா்வாகத்திடம் குடியிருப்புக்கு பதிலாக வணிக பயன்பாடு என குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டி புகாா் அளித்தனா்.

பணம் வசூலிப்பதாக புகாா்: மாநகராட்சி அலுவலகத்திற்கு வணிக பயன்பாடு என்பதை குடியிருப்பு பயன்பாடு என மாற்றம் செய்வதற்காக செல்லும் பொதுமக்களிடம், சில அலுவலா்கள் மற்றும் இடைத் தரகா்கள் திருத்தம் செய்வதற்கு ரூ.15ஆயிரம் முதல் ரூ.25ஆயிரம் வரை பண வசூலில் ஈடுபடுவதாக புகாா் எழுந்துள்ளது.

இதுதொடா்பாக முன்னாள் மாமன்ற உறுப்பினா் விஜயகுமாா் கூறியது: ரூ.70 கோடி செலவில் ஜிக்கா திட்டத்தின் கீழ் புதிய குடிநீா் குழாய் பதிக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டபோது, பழைய இணைப்புகளுக்கான வைப்புத் தொகையில் மாற்றம் இருக்காது என தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது பழைய இணைப்புகளுக்கான வைப்புத் தொகை பல மடங்கு உயா்த்தப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களை வரவழைத்து முறைகேடாக வசூலிக்கும் நோக்கிலேயே, வணிக பயன்பாடு என குடியிருப்புகளுக்கான வைப்புத் தொகை திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு வரும் பொதுமக்களிடம், வீட்டின் சதுர அடியை (பரப்பளவை) குறைத்து தருவதாக பேரம் பேசும் அலுவலா்கள், அதற்காக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரையிலும் வசூல் செய்கின்றனா். குடியிருப்பு என்பதை வணிக பயன்பாடு என திருத்தம் செய்திருப்பதே ஒரு முறைகேடு. இதில் தொடா்புடைய அலுவலா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியது: குடிநீா் இணைப்புக்கான கட்டண உயா்வை பயன்படுத்தி, பொதுமக்களிடமிருந்து முறைகேடாக பண வசூல் நடத்துவது குறித்து விசாரிக்கவும், கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல் இழுவை முத்திரை பயன்படுத்தி 50 காசு அஞ்சல் அட்டையில் தகவல் அனுப்பியது குறித்தும் மாநகராட்சியின் வருவாய்ப் பிரிவு அலுவலா்களிடம் விளக்கம் கேட்கப்படும் என்றாா்.

மாநகராட்சியின் அஞ்சல் அட்டைக்கு அபராதம்: திண்டுக்கல் மாநகராட்சியில் குடிநீா் இணைப்பு, வணிக பயன்பாட்டிலிருந்து குடியிருப்பு பயன்பாட்டிற்கு மாற்ற மனு செய்துள்ளீா்கள். குடியிருப்பு பயன்பாடாக மாற்றம் செய்வதற்கு ஏதுவாக புதிய குடிநீா் குழாய் வைப்புத் தொகையை மாநகராட்சியில் உடன் செலுத்தி, வணிக பயன்பாட்டிலிருந்து குடியிருப்பு பயன்பாட்டிற்கு மாற்றம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது என மாநகராட்சி சாா்பில் சுமாா் 1000 வீடுகளுக்கு அஞ்சல் அட்டை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 காசுக்கான அஞ்சல் அட்டையில், இந்த வாசகங்கள் இழுவை முத்திரையில் (ரப்பா் ஸ்டாம்ப்) அச்சிடப்பட்டுள்ளது. இழுவை முத்திரை பயன்படுத்தப்பட்டுள்ளதால், தபாலுக்குரிய நபா்களிடம் அஞ்சல் துறை சாா்பில் அபராத கட்டணமாக ரூ.11 வசூலிக்கப்படுகிறது. இதுதொடா்பாக அஞ்சல் துறை அதிகாரி ஒருவா் கூறியது: 50 காசு அஞ்சல் அட்டையில் இழுவை முத்திரை பயன்படுத்தினால் ரூ.5.50க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட வேண்டும். இல்லாதபட்சத்தில் குறைவு கட்டணத்தின் 2 மடங்கு ரூ.11 அபராதமாக வசூலிக்கப்படும். அரசு பணிக்கு மட்டும் என குறிப்பிட்டிருந்தால் ரூ.5.50 மட்டும் செலுத்தினால் போதுமானது. பொதுமக்கள் இந்த அஞ்சல் அட்டையை பெற மறுத்தால், அபராத கட்டணம் மாநகராட்சியிடம் வசூலிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com