உள்ளாட்சித் தேர்தல் எதிர்பார்ப்பு: குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்க குவிந்த அரசியல் கட்சியினர்!

உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பில், பொதுமக்கள் மத்தியில் தங்களது

உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பில், பொதுமக்கள் மத்தியில் தங்களது செல்வாக்கை உறுதி செய்யும் விதமாக திங்கள்கிழமை திண்டுக்கல் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் அரசியல் கட்சி மற்றும் அமைப்புகள் மனுக்களை அளித்து  பரபரப்பை ஏற்படுத்தின.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ள பாலசமுத்திரம், பாப்பம்பட்டி, கலையம்புதூர் பகுதிகளில் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக குடிநீர் பிரச்னை உள்ளதாக கூறி, பொதுமக்களுடன் வந்து பழனி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் பெ.செந்தில்குமார் ஆட்சியரிடம் மனு அளித்தார். 
மனு அளிக்க வந்த செந்தில்குமாரை, மாவட்ட வருவாய் அலுவலர் வேலு உடனடியாக அழைத்தார். ஆனாலும் அதற்கு மறுப்பு தெரிவித்த செந்தில்குமார், பொதுமக்களுடன் வரிசையில் நின்று ஆட்சியரை சந்தித்து முறையிட்டார். 
 திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட சவேரியார் பாளையம் பகுதியில் சாலை வசதி ஏற்படுத்தக் கோரி முன்னாள் மாமன்ற உறுப்பினர் மார்த்தாண்டம், பொதுமக்களுடன் வந்து மனு அளித்தார். அதேபோல், 30 ஆவது வார்டுக்குள்பட்ட திருமலைசாமிபுரம், இந்திராநகர் பகுதியில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் விநியோகம் இல்லை என அப்பகுதியின் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஆர்.விஜயகுமார் மனு அளித்தார். வடமதுரை அடுத்துள்ள மோர்பட்டி பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தக் கோரி திமுக நிர்வாகி ஒருவர் மனு அளிக்க வந்தார். 
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், அதன் மாவட்டச் செயலர் கே.பாலாஜி தலைமையில் அகரம் அடுத்துள்ள உலகம்பட்டி கலைஞர் நகர் மக்கள் குடிநீர் வசதி கேட்டு மனு அளிக்க வந்தனர். இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில், வேடசந்தூர் உறுப்பு கல்லூரி மாணவர்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தக் கோரி மனு அளித்தனர். 
அரசியல் கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளுடன் முற்றுகையிட்ட பொதுமக்களால், திங்கள்கிழமை பிற்பகல் வரையிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
திண்டுக்கல் மாநகராட்சியின் முன்னாள் மாமன்ற உறுப்பினர் கே.விஜயகுமார் கூறுகையில், குடிநீர் குழாய் அமைப்பதற்கான ஒப்பந்தப் பணிகளை, மாநகராட்சியின் பொறியாளர், உதவிப் பொறியாளர்கள், முகவர்கள் மூலம் எடுத்துள்ளனர். 
அதன் மூலம், ஆளுங்கட்சியினர் சுட்டிக்காட்டும் பகுதியில் மட்டும் சீரான குடிநீர் விநியோகம் செய்வதற்கு பணிகளை நிறைவேற்றி வருகின்றனர். இதுதொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களுடனும், மாமன்ற முன்னாள் உறுப்பினர்களுடனும் சென்று மனு அளித்த போதிலும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. 
இதனால், தற்போது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்துள்ளோம். உள்ளாட்சித் தேர்தலுக்காக வரவில்லை என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com