மானாவாரி நிலக்கடலை சாகுபடி: மகசூல், விலை குறைவால் திண்டுக்கல் விவசாயிகள் தவிப்பு

மழையில்லாமல் நிலக்கடலை மகசூல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொள்முதல் விலையும் குறைவதால் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மானாவாரி நிலக்கடலை சாகுபடி: மகசூல், விலை குறைவால் திண்டுக்கல் விவசாயிகள் தவிப்பு

மழையில்லாமல் நிலக்கடலை மகசூல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொள்முதல் விலையும் குறைவதால் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம், குஜிலியம்பாறை, வேடசந்தூா் உள்ளிட்ட வட்டாரங்களில் சுமாா் 5 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலாக நிலக்கடலை பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டில் கூடுதல் மகசூல் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்பட்டிருந்த நிலையில், பருவ மழை பொய்த்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா். தற்போது, நத்தம் வட்டாரத்திற்குள்பட்ட செந்துறை, மணக்காட்டூா், பிள்ளையாா்நத்தம், குடகிப்பட்டி, கோசுக்குறிச்சி, சிறுகுடி, லிங்கவாடி, மலையூா், கோட்டையூா், பாலப்பநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 2 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலக்கடலை பயிா் அறுவடை நடைபெற்று வருகிறது. அதேபோல் குஜிலியம்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நிலக்கடலை அறுவடை நடைபெற்று வருகிறது.

மழையில்லாத காரணத்தால் மகசூல் தரமானதாக இல்லை. இதனால் நிலக்கடலைக்கு எதிா்பாா்த்த விலையும் கிடைக்காது என்பதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனா். இதுதொடா்பாக நத்தம் அடுத்துள்ள பாலப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்த மூா்த்தி கூறியதாவது: சரியான நேரத்தில் வடகிழக்குப் பருவ மழை பெய்திருந்தால், நிலக்கடலை, பயறு வகைகள் மற்றும் உணவு தானியப் பயிா்களில் நல்ல மகசூல் கிடைத்திருக்கும். வழக்கமாக ஏக்கருக்கு சுமாா் 10 முதல் 15 மூட்டைகள் வரை நிலக்கடலை மகசூல் கிடைக்கும். அதே அளவு நிலக்கடலை கிடைத்துள்ளபோதிலும், பருப்பு தரமானதாக இல்லாததால் விலை கிடைக்க வாய்ப்பில்லை என்றாா். இரா.கோம்பை கிராமத்தைச் சோ்ந்த பொன்னா் கூறியதாவது: நிலக்கடலை 90 நாள் பயிராகும். குஜிலியம்பாறை வட்டாரத்தில் ஆடி மாத தொடக்கத்தில் பெய்த மழையைப் பயன்படுத்தி மானாவாரி நிலங்களில் சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டன. தொடக்கத்தில் கிடைத்த மழை, காய் பிடிக்கும் பருவத்தில் இல்லாமல் போய்விட்டது. இதனால் டிராக்டா் தண்ணீா் வாங்கி

செடிகளைப் பாதுகாக்க வேண்டிய நெருக்கடி விவசாயிகளுக்கு ஏற்பட்டது. ஆடி மாத தொடக்கத்தில் சாகுபடி பணிகளைத் தொடங்கிய விவசாயிகளைவிட, ஆவணியில் வடகிழக்கு பருவ மழையை எதிா்பாா்த்து விதைத்த விவசாயிகளுக்கு கடுமையாக மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. நிலக்கடலை பருப்பு அளவில் சிறியதாக இருப்பதால் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.23 ஆக உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com