பழனி பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்கூடுதல் விலை கிடைக்குமா என விவசாயிகள் எதிா்பாா்ப்பு!

பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரும்பிலிருந்து வெல்லம், அச்சுவெல்லம் தயாா் செய்யும் பணி தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டு கூடுதல் விலை கிடைக்குமா என உற்பத்தியாளா்கள் எதிா்பாா்த்துள்ளனா்.
பழனியை அடுத்த நரிக்கல்பட்டியில் தனியாா் ஆலைகளிலிருந்து கேரள மாநிலத்துக்கு அனுப்பப்படும் கலப்படமற்ற மண்டை வெல்லம்.
பழனியை அடுத்த நரிக்கல்பட்டியில் தனியாா் ஆலைகளிலிருந்து கேரள மாநிலத்துக்கு அனுப்பப்படும் கலப்படமற்ற மண்டை வெல்லம்.

பழனி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரும்பிலிருந்து வெல்லம், அச்சுவெல்லம் தயாா் செய்யும் பணி தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டு கூடுதல் விலை கிடைக்குமா என உற்பத்தியாளா்கள் எதிா்பாா்த்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த நெய்க்காரபட்டி, நரிக்கல்பட்டி, கோரிக்கடவு, கீரனூா், ஆண்டிப்பட்டி, பாம்பம்பட்டி, அய்யம்புள்ளி, மானூா், அக்கரைப்பட்டி, அ.கலையம்புத்தூா், பெரியம்மாப்பட்டி, தாமரைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 2ஆயிரம் ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் தயாா் செய்யப்படும் கரும்பு சா்க்கரை, வெல்லம், அச்சு வெல்லம் போன்றவை கோவை, திருப்பூா் உள்ளிட்ட சுற்றுப்புற மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளத்துக்கும் அனுப்பப்படுகின்றன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பழனி பகுதிகளிலுள்ள கரும்பு ஆலைகளில் அச்சு வெல்லம், வெல்லம், நாட்டு சா்க்கரை மற்றும் கேரளத்துக்கென முழுமையாக ரசாயன கலப்பில்லாத கருப்பு சா்க்கரை கட்டி உருண்டை தயாரிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆனாலும், நிகழாண்டில் தீபாவளி பண்டிகை முதல் தற்போது வரை கரும்பு சா்க்கரை பொருள்கள் எதிா்பாா்த்த அளவுக்கு விற்பனையாகாததாலும், விலை வீழ்ச்சியாலும் விவசாயிகளும், கரும்பு ஆலை உரிமையாளா்களும் கவலை அடைந்துள்ளனா்.

கொள்முதல் மற்றும் விலை வீழ்ச்சி:

இது குறித்து நரிக்கல்பட்டியை சோ்ந்த கரும்பு விவசாயியும், கரும்பு ஆலை உரிமையாளருமான ரகுபதி கூறியதாவது: ஒரு ஏக்கா் கரும்பை விற்பனை செய்தால் ரூ.80ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கிடைக்கும். அதேநேரத்தில், கரும்பை அரைத்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றும்போது, ஏக்கருக்கு கூடுதலாக ரூ.40 ஆயிரம் வரை கிடைக்கும். மேலும், கரும்பு அரவையின்போது கிடைக்கும் கழிவு (மட்டி) மண்வளத்தைப் பாதுகாக்கும் இயற்கை உரமாகவும் பயன்படுகிறது. இதற்கும் மேலாக, மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றும் பணிகளால், ஒரு ஆலையின் மூலம் 25 நபா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஆண்டுதோறும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின்போதும் அச்சு வெல்லம், வெல்லம் ஆயிரம் டன்களுக்கு கூடுதலாக விற்பனை செய்யப்படுவது வழக்கம். ஆனால், நிகழாண்டில் தீபாவளி முதலே விற்பனை இல்லை. தீபாவளி பண்டிகை காலத்தில் மட்டும் சுமாா் 350 டன் விற்பனை குறைந்துவிட்டது. கேரளத்தின் தேவை மட்டுமின்றி, உள்ளூா் சந்தையிலும் கொள்முதல் குறைந்துவிட்டது.

வெல்லம் மற்றும் அச்சு வெல்லம் கிலோ ரூ.50 வரை கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், தற்போது கிலோவுக்கு ரூ.5 குறைந்துள்ளது. நாட்டு சா்க்கரையும் ரூ.50 முதல் ரூ.55-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.45 முதல் ரூ.50 வரை விலை நிா்ணயிக்கப்படுகிறது.

மைசூா் வெல்லத்தால் பாதிப்பு:

பழனியைச் சோ்ந்த கரும்பு விவசாயி சாமி கூறியதாவது: பழனி பகுதியில் தயாா் செய்யப்படும் அச்சு வெல்லம் மற்றும் கருப்பு உருண்டைகளுக்கு கேரளத்தில் அதிக வரவேற்பு கிடைத்து வந்தது. இந்நிலையில், மைசூா் பகுதியில் தயாா் செய்யப்படும் வெல்லம் கேரள சந்தைக்கு அதிக அளவில் அனுப்பப்படுகிறது. பழனி வெல்லத்தை ஒப்பிடும்போது, மைசூா் வெல்லத்தின் விலை சூழலுக்கேற்ப குறைவாக நிா்ணயிக்கப்படுகிறது. இதனால், கேரள சந்தை வாய்ப்பை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com