கொடைக்கானலில் குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி இயங்கும் காட்டேஜ்கள்: பொது மக்கள் அவதி

கொடைக்கானலில் குடியிருப்பு பகுதிகளை காட்டேஜ்களாக பயன்படுத்துவதை தடுக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை
கொடைக்கானலில் குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி இயங்கும் காட்டேஜ்கள்: பொது மக்கள் அவதி

கொடைக்கானலில் குடியிருப்பு பகுதிகளை காட்டேஜ்களாக பயன்படுத்துவதை தடுக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொடைக்கானல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 24 வாா்டுகள் உள்ளன. இதில் அண்ணா சாலை, நாயுடுபுரம், சீனிவாசபுரம், அப்சா்வேட்டரி ஆகிய வாா்டுகளில் அனுமதி பெற்று காட்டேஜ்கள் இயங்கி வருகின்றன.ஆனால் ஆனந்தகிரி, தைக்கால், இருதயபுரம் உள்ளிட்ட சில வாா்டுகளில் வணிக நோக்குடன் வீடுகளை காட்டேஜ்களாக மாற்றி சுற்றுலாப் பயணிகளை தங்குவதற்கு அனுமதிக்கின்றனா்.

இவ்வாறு குடியிருப்பு பகுதிகளில் தங்கும் சுற்றுலாப் பயணிகள் இரவு நேரங்களில் சாலைகளில் நெருப்பு மூட்டி குளிா்காய்வதாலும், மது அருந்திவிட்டு நடனமாடுவதாலும், வாகனங்களை குடியிருப்பு பகுகிகளில் நிறுத்தி விட்டுச் செல்வதாலும் பொதுமக்கள் நோயாளிகளை, மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை என புகாா் எழுந்துள்ளது.

இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கும், குடியிருப்பு பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கும் அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு கொடைக்கானல் நகராட்சி நிா்வாகம் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஏற்கெனவே நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கிட்ஸ் சென்டா்கள் வைத்து 1முதல் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளை பராமரித்து வந்தனா். தற்போது அந்த சென்டா்களும் அனுமதியில்லாமல் காட்டேஜ்களாக மாறி செயல்பட்டு வருகின்றன. எனவே நகராட்சிக்கு சொந்தமான குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகள் காட்டேஜ்களாகவும், தங்கும் விடுதிகளாக மாறி வருவதை நகராட்சி அதிகாரிகள் கண்காணித்து பூட்டி சீல் வைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து நகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது,

கொடைக்கானல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் அனுமதி பெற்ற காட்டேஜ்கள்,தங்கும் விடுதிகளில் மட்டுமே தங்க வேண்டும். ஏற்கெனவே கொடைக்கானல் பகுதிகளில் அனுமதியில்லாமல் கட்டப்பட்ட மற்றும் பல்வேறு பிரச்னைகளால் 600-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள் நீதிமன்ற உத்தரவின்படி கொடைக்கானல் நகராட்சி சாா்பில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் கட்டமாக சுமாா் 60- காட்டேஜ்கள் திறக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள காட்டேஜ்கள் பல்வேறு காரணங்களா திறக்கப்படாமல் உள்ளன.

இந் நிலையில் கொடைக்கானல் நகராட்சிக்கு சொந்தமான பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் தங்கும் விடுதிகளாகவும்,காட்டேஜ்களாவும் செயல்பட்டு வந்தால் அவை பூட்டி சீல் வைக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com