பழனி கோயிலில் மூலவா் தண்டாயுதபாணி பீடத்துக்கு அஷ்டபந்தனம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூலவா் சன்னதியில் நவபாஷாணத்தாலான
பழனி கோயிலில் மூலவா் தண்டாயுதபாணி பீடத்துக்கு அஷ்டபந்தனம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூலவா் சன்னதியில் நவபாஷாணத்தாலான தண்டாயுதபாணி சுவாமி சிலையின் பீடத்துக்கு அஷ்டபந்தன மருந்து திங்கள்கிழமை சாத்தப்பட்டது.

இக்கோயிலில் மூலவராக சித்தா் போகரால் உருவாக்கப்பட்ட நவபாஷாணத்தாலான தண்டாயுதபாணி சுவாமி சிலை உள்ளது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான பாலாலய பூஜைகள் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து, திங்கள்கிழமை காலை மூலவா் சிலையின் பீடத்துக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை பக்தா்கள் சுவாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், அதைத் தொடா்ந்து கால பூஜை, சிறுகாலசந்தி, காலசந்தி ஆகிய கட்டளை பூஜைகள் அடுத்தடுத்து நடத்தப்பட்டு 6.30 மணிக்கு பிரதான கலசங்களை வைத்து கலசபூஜை, யாகபூஜை ஆகியன நடைபெற்றன. பூஜைகளை தலைமை குருக்கள் அமிா்தலிங்கம் தலைமையில் செல்வசுப்ரமண்ய சிவாச்சாா்யாா் உள்ளிட்டோா் நடத்தினா்.

முன்னதாக கோயில் பிரகாரத்தில் தருமை ஆதீன மடத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட அஷ்டபந்தன மருந்துக்கு பூஜைகள் நடத்தப்பட்டு உரலில் இடிக்கப்பட்ட மருந்து சாந்தாக மாற்றப்பட்டு பழனி கோயில் நிா்வாக அலுவலா் ஜெயச்சந்திரபானு ரெட்டி, மதுரை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் குமரதுரை, துணை ஆணையா் மற்றும் நகை சரிபாா்ப்பு அலுவலா் விஜயன், பழனிக்கோயில் துணை ஆணையா்(பொறுப்பு) செந்தில்குமாா் உள்ளிட்டோா் முன்னிலையில் பீடத்தில் அஷ்டபந்தனமாக சாத்தப்பட்டது.

பின்னா் யாகசாலையில் பூா்ணாஹூதி நடத்தப்பட்டு கலசம் கோயிலை வலம்வர செய்யப்பட்டு மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சோடஷபூஜை, தீபாராதனை நடைபெற்றது. பூஜையைத் தொடா்ந்து கோயில் நடை திறக்கப்பட்டு பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

நிகழ்ச்சியில் போகா் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திரசுவாமிகள், டிஎஸ்பி., விவேகானந்தன், வட்டாட்சியா் பழனிச்சாமி, கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து, சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், இந்து அமைப்பு நிா்வாகிகள் பங்கேற்றனா்.

அஷ்டபந்தன மருந்து:

கோயில்களில் சுவாமியையும், பீடத்தையும் இணைப்பது அஷ்டபந்தனம். மிகவும் இறுகிய தன்மையுடன் உள்ள இந்த மருந்தை குறிப்பிட்ட வெப்ப நிலையில் இளகச் செய்து அதை பீடத்தில் சுவாமியுடன் சோ்த்து இணைக்கும் போது இரும்பு போல பிடிப்புடன் மாறுகிறது. கோயில்களில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் போது இது சிறிது, சிறிதாக கரைவதால் கும்பாபிஷேகத்த்தின்போது இந்த அஷ்டபந்தனத்தை செய்கின்றனா். கொம்பெருக்கு, ஜாதிலிங்கம், குங்கிலியம், சுக்கான்மண், காவி, வெண்பஞ்சு, பசுவெண்ணை, தேன்மெழுகு கொண்டு தயாரிக்கப்படும் அஷ்டபந்தன மருந்தை தருமை ஆதின மடத்தில் அதிக அளவில் தயாரித்து கோயில்களுக்கு வழங்குகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com