சிறுவன் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக் கோரி வழக்கு:பிரேதப் பரிசோதனை அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவு

பழனி அருகே சிறுவன் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கில், சிறுவனின் பிரேதப் பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட விடியோ பதிவு மற்றும் அதன் அறிக்கையைத் தாக்கல்

பழனி அருகே சிறுவன் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கில், சிறுவனின் பிரேதப் பரிசோதனையின் போது எடுக்கப்பட்ட விடியோ பதிவு மற்றும் அதன் அறிக்கையைத் தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சேதுபதி தாக்கல் செய்த மனு: பழனியை அடுத்துள்ள சின்ன கலையம்புத்தூரில் எனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறேன். இதில் 13 வயதான எனது மகன் 7 ஆம் வகுப்பு படித்து வந்தான். பொது முடக்கம் காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளித்துள்ளதால் வீட்டில் இருந்து வந்தான்.

இந்நிலையில் ஜூலை 24 ஆம் தேதி நானும் எனது மனைவியும் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினோம். அப்போது எனது மகன் வீட்டில் இல்லை. பல்வேறு இடங்களில் தேடியும் மகனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மறுநாள் காலையில் அதேபகுதியைச் சோ்ந்த சிட்டிபாபு என்பவரது வீட்டில் எனது மகன் சடலமாகக் கிடந்தான். அவனது உடலில் கழுத்து உள்பட பல இடங்களில் காயங்கள் இருந்தன. மேலும் அவன் மின்சாரம் தாக்கியது போல் எரிந்த நிலையிலும் கிடந்தான். இதுகுறித்து பழனி காவல் நிலையத்தில் புகாா் அளித்தோம்.

இதற்கிடையே, சிட்டிபாபுவும் அவரது பெற்றோரும் எனது மகனை வேலை செய்ய வற்புறுத்தி தாக்கியதும், வேலை செய்ய மறுத்த எனது மகன் அவா்களது வீட்டின் மாடியிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்டதால் உயிரிழந்ததும் தெரியவந்தது. மேலும் இதை மறைக்க அவன் மின்சாரம் தாக்கி இறந்தது போன்ற ஏற்பாட்டை சிட்டிபாபு குடும்பத்தினா் செய்துள்ளனா். இதுகுறித்து போலீஸாரிடம் தெரிவித்தபோதும் சிட்டிபாபு மற்றும் அவரது பெற்றோரைக் காப்பாற்றும் நோக்கில் சந்தேக மரணமாகப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். எனவே எனது மகன் மரணத்தைக் கொலை வழக்காக மாற்றி, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதி ஆா்.பொங்கியப்பன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரா் மகனின் மரணம் குறித்து பழனி காவல் ஆய்வாளா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மேலும் உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட விடியோ பதிவு மற்றும் அதன் பிரேதப் பரிசோதனை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com