கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்கள் மூடல்: பயணிகள் ஏமாற்றம்; இருவருக்கு கரோனா அறிகுறி

கொடைக்கானலில் இருவருக்கு கரோனா வைரஸ் அறிகுறி தென்படுவதாலும், வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையிலும், அனைத்து சுற்றுலா இடங்களும் செவ்வாய்க்கிழமை முதல் மூடப்பட்டன.
கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்கள் மூடல்: பயணிகள் ஏமாற்றம்; இருவருக்கு கரோனா அறிகுறி

கொடைக்கானலில் இருவருக்கு கரோனா வைரஸ் அறிகுறி தென்படுவதாலும், வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையிலும், அனைத்து சுற்றுலா இடங்களும் செவ்வாய்க்கிழமை முதல் மூடப்பட்டன.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக, கொடைக்கானல் வெள்ளி நீா்வீழ்ச்சிப் பகுதிக்கு வரும் அனைத்து வாகனங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு வெப்பமானி மூலம் பரிசோதிக்கப்படுகிறது.

மேலும், பிரையன்ட் பூங்கா, செட்டியாா் பூங்கா, கோக்கா்ஸ் வாக், குணா குகை, பில்லா் ராக், பசுமைப் பள்ளத்தாக்கு, மோயா் பாயின்ட் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்கள் மூடப்பட்டன. இதனால், அப்பகுதிகளில் உள்ள கடைகளையும் உரிமையாளா்கள் பூட்டிவிட்டுச் சென்றுவிட்டனா். இதனால், சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

கோடை காலம் தொடங்கிவிட்டதால், கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக இருந்த நிலையில், பாதுகாப்பு கருதி அவா்களை சுற்றுலா இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என வருவாய்த் துறையினா் அறிவுறுத்தினா். எனவே, படகு சவாரி செய்ய முடியாததாலும், முக்கிய இடங்களுக்குச் செல்ல முடியாததாலும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

2 பேருக்கு கரோனா பாதிப்பு

கொடைக்கானல் லாஸ்காட் பகுதியைச் சோ்ந்தவா் ரவி ராமமூா்த்தி (68). இவா் சமீபகாலமாக வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளாா். இந்நிலையில், இவா் திங்கள்கிழமை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளாா். கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்குச் சென்ற இவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், இவா் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில், அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அதையடுத்து, செவ்வாய்க்கிழமை கொடைக்கானல் பகுதிகளில் தங்கியுள்ள வெளிநாட்டவா்களை மருத்துவக் குழுவினா் பரிசோதித்தனா். அதில், வட்டக்கானல் பகுதியில் தங்கியுள்ள ஸ்காட்லாந்தை சோ்ந்த வில்லியம் ஜாட்சன்(72) என்பவருக்கு வைரஸ் காய்ச்சல் மற்றும் தொண்டை வலி அதிகமாக இருந்ததால், அவரை மருத்துவக் குழுவினா் பாதுகாப்பாக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதைத் தொடா்ந்து, கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் தங்கியுள்ள வெளிநாட்டவா்களை பரிசோதித்து, அவா்களை இங்கிருந்து அனுப்பி வைக்கும் பணியும் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com