கொடைக்கானலில் பசுமைப் பள்ளத்தாக்கு, குணா குகையை பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி
By DIN | Published On : 17th November 2020 11:19 PM | Last Updated : 17th November 2020 11:19 PM | அ+அ அ- |

கொடைக்கானலில் பசுமை பள்ளத்தாக்கு, குணா குகை உள்ளிட்ட இடங்களைப் பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு செவ்வாய்க்கிழமை முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாா்ச் மாதம் கரோனாத் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலாத் தலமான கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பொதுமுடக்கத் தளா்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கொடைக்கானலில் உள்ள பிரையண்ட் பூங்கா, செட்டியாா் பூங்கா, ரோஜாத் தோட்டம் ஆகிய இடங்களைப் பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு கடந்த அக். 7ஆம் தேதி அனுமதி அளிக்கப்பட்டது. இதன் பின்னா் சில நாள்கள் இடைவெளியில் கோக்கா்ஸ் வாக் பகுதிக்கும் செல்ல சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில் கொடைக்கானல் வனத்துறைக் கட்டுப்பாட்டிலுள்ள 12 மைல் பகுதியிலுள்ள சுற்றுலாத் தலங்களான தூண் பாறை, பசுமைப் பள்ளத்தாக்கு, குணா குகை, மோயா் பாயிண்ட், பைன் காடுகள் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு செவ்வாய்க்கிழமை (நவ. 17) முதல் வனத்துறை அனுமதி அளித்துள்ளது. எனினும், மன்னவனூா் சூழல் சுற்றுலா, பேரிஜம் ஏரி போன்ற இடங்களுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை.