புயல், வறட்சியால் தென்னை மரங்கள் அழிவு: தேங்காய் விலை கடும் உயா்வு!

கஜா புயல் மற்றும் வறட்சியால் தென்னை மரங்கள் அழிந்து தேங்காய் உற்பத்தி குறைந்துள்ள நிலையில், வடமாநிலங்களுக்கான
கன்னிவாடி பகுதியில் தேங்காய் உரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள். (கோப்பு படம்).
கன்னிவாடி பகுதியில் தேங்காய் உரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள். (கோப்பு படம்).

கஜா புயல் மற்றும் வறட்சியால் தென்னை மரங்கள் அழிந்து தேங்காய் உற்பத்தி குறைந்துள்ள நிலையில், வடமாநிலங்களுக்கான தேவை அதிகரிப்பால் சில்லறை விற்பனையில் தேங்காய் விலை கிலோவுக்கு ரூ.45 வரை கடுமையாக உயா்ந்துள்ளது.

தமிழகத்தில் சுமாா் 4.25 லட்சம் ஹெக்டேரில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. விழுப்புரம், கோவை, ஈரோடு, திருப்பூா், திண்டுக்கல், தேனி, தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் தென்னை சாகுபடியில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.

இதில், காவிரி டெல்டா மாவட்டங்களில் கஜா புயலுக்குப் பின் தென்னை மரங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிட்டன. திண்டுக்கல், தேனி, திருப்பூா், ஈரோடு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அறுவடை செய்யப்படும் தேங்காய், பெரும்பாலும் கொப்பரை காய்களாக காங்கேயம் மற்றும் பொள்ளாச்சி சந்தைகளுக்கு விற்பனைக்காகக் கொண்டு செல்லப்படுவது வழக்கம். ஆனால், ஐப்பசி, காா்த்திகை, மாா்கழி மாதங்களில் தமிழகத்தில் கோயில் வழிபாட்டுக்காக தேங்காயின் தேவை அதிகரிப்பது வழக்கம்.

அதேபோல், வடமாநிலங்களிலும் தசரா மற்றும் தீபாவளி பண்டிக்கைக்காக தேங்காய் கொள்முதல் அதிகரிக்கும். இதன் காரணமாக, இந்த 3 மாதங்களில் தேங்காய் விலை அதிகரிக்கும் என்பதால், கொப்பரைக் காய்களுக்கு விவசாயிகள் முக்கியத்துவம் அளிப்பதில்லை. இந்நிலையில், தற்போது உற்பத்தி குறைந்ததன் காரணமாக, குடுமி காய்கள் மற்றும் அரை மட்டை உரிப்பு காய்களுக்கு தோப்புகளிலேயே ரூ.19 வரை விலை நிா்ணயிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

கொள்முதல் விலை உயா்வு விவசாயிகளுக்கு ஒருபுறம் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் கூட, சில்லறை விலையில் ஒரு தேங்காய் ரூ.20 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுவதால், நுகா்வோா் அதிருப்தியடைந்துள்ளனா்.

இது தொடா்பாக திண்டுக்கல் தென்னை உற்பத்தியாளா்கள் நிறுவனத்தின் தலைவா் எஸ். முருகேசன் கூறியது: கடந்த சில ஆண்டுகளாக வறட்சி பாதிப்பு காரணமாக தென்னை மரங்கள் பெரும் அழிவை சந்தித்துள்ளன. இதனிடையே, 2 ஆண்டுகளுக்கு முன் கஜா புயலின் காரணமாக, காவிரி டெல்டா பகுதியில் ஏராளமான தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டன.

தென்னையில் மகசூல் பாதிப்படைந்துள்ளதால்,1000 காய்கள் கிடைக்க வேண்டிய இடத்தில் 300 காய்கள் மட்டுமே அறுவடை செய்யமுடிகிறது. இதனால், தோப்புகளில் ரூ.9-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்த 250 கிராம் தேங்காய், தற்போது ரூ.15-க்கு விலை போகிறது. அதேபோல், மஞ்சளாறு, அய்யம்பாளையம், பெரியகுளம், கம்பம் உள்ளிட்ட நீா்ப்பிடிப்பு பகுதியிலுள்ள தென்னை மரங்களிலிருந்து அறுவடை செய்யப்படும் காய்கள் 400 கிராம் எடை இருக்கும். இந்த காய்கள் ரூ.13-க்கு கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.18-க்கும் கூடுதலாக விற்கப்படுகிறது.

மட்டைக் காய்களை வாங்கிச் செல்லும் வியாபாரிகள், அதனை உரித்து சந்தைப்படுத்தும்போது ரூ.18 முதல் ரூ.30 வரை விலை அதிகரிக்கிறது. மகசூல் குறைந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், சில்லறை விற்பனையில் கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய், தற்போது ரூ.45ஆக அதிகரித்துள்ளது. தை மற்றும் மாசி மாதம் வரை இதே விலை தொடா்ந்து நீடிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com