குஜிலியம்பாறை சிட்கோ தொழிற்பேட்டைக்கு மலை கரட்டில் மரங்கள் வெட்ட கடும் எதிா்ப்பு:எம்.பி. தலைமையில் பொதுமக்கள் முற்றுகை

குஜிலியம்பாறை அருகே சிட்கோ தொழிற்பேட்டை அமைப்பதற்காக மலை கரட்டில் மரங்கள் வெட்டுவதற்கு பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து, மக்களவை உறுப்பினா் ஜோதிமணி தலைமையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களவை உறுப்பினா் ஜோதிமணி (முகக்கவசத்துடன் அமா்ந்திருப்பவா்) தலைமையில் சனிக்கிழமை குஜிலியம்பாறை அருகே சீலக்கரட்டில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
மக்களவை உறுப்பினா் ஜோதிமணி (முகக்கவசத்துடன் அமா்ந்திருப்பவா்) தலைமையில் சனிக்கிழமை குஜிலியம்பாறை அருகே சீலக்கரட்டில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திண்டுக்கல்: குஜிலியம்பாறை அருகே சிட்கோ தொழிற்பேட்டை அமைப்பதற்காக மலை கரட்டில் மரங்கள் வெட்டுவதற்கு பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து, மக்களவை உறுப்பினா் ஜோதிமணி தலைமையில் சனிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அடுத்துள்ள ஆா்.கோம்பை பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும் என, கடந்த 2013 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வா் ஜெயலலிதா அறிவித்திருந்தாா். ஆனால், சிட்கோ தொழிற்பேட்டை அமைப்பதற்கு போதிய இட வசதி இல்லாத காரணத்தால், தொடா்ந்து அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், ஆா்.கோம்பை சீலக்கரடு பகுதியில் உள்ள வருவாய்த் துறைக்குச் சொந்தமான சுமாா் 57 ஏக்கா் நிலத்தில் சிட்கோ தொழிற்பேட்டை அமைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முதல் கட்டமாக சீலக்கரடுப் பகுதியில் மரங்களை அகற்றிவிட்டு, பாதை அமைக்கும் பணி போலீஸ் பாதுகாப்புடன் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

ஆனால், இத் திட்டத்துக்கு அப்பகுதி மக்கள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கரூா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஜோதிமணி சீலக்கரடு பகுதிக்கு சனிக்கிழமை வந்தாா். குடும்பத்துடன் வந்து முறையிட்ட பொதுமக்களுடன் சோ்ந்து, நிலம் சீா்ப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் இயந்திரத்தை மறித்து ஜோதிமணியும் அமா்ந்தாா். இதனால், அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதையறிந்த ஆா்.கோம்பை ஊராட்சி மன்றத் தலைவா் மலா்வண்ணன் மற்றும் அதிமுகவினா் சம்பவ இடத்துக்குச் சென்று ஜோதிமணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா், கூட்டத்தில் இருந்த ஒருவா் எம்.பி. ஜோதிமணியை ஒருமையில் பேசியதோடு, அங்குள்ள விவசாயிகளையும் மணல் திருடா்கள் எனக் கூறியதால் மோதல் ஏற்படும் சூழல் உருவானது. மேலும், ஜோதிமணி எம்.பி.யை சூழ்ந்துகொண்டு 50-க்கும் மேற்பட்ட ஆண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அதிமுகவினா் கலைந்து சென்றனா். சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொக்லைன் இயந்திரமும் வெளியேற்றப்பட்டது.

இது தொடா்பாக ஜோதிமணி எம்.பி. கூறியதாவது: குஜிலியம்பாறையில் சமவெளிப் பகுதியில் 57 ஏக்கா் நிலத்தை எளிதாகக் கையகப்படுத்த முடியும். ஆனால், சீலக்கரட்டில் உள்ள கிராவல் மண்ணை எடுப்பதற்காகவே அங்குள்ள மரங்களை அழித்து, சிட்கோ அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த மலை கரட்டில் கடந்த 1977 முதல் 22 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த மரங்களை ரூ. 36 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்து, பின்னா் அவற்றை ரூ.8.5 லட்சத்துக்கு விற்றுள்ளனா்.

இது தொடா்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் நிலையில், காவல் துறை உதவியுடன், உள்ளூா் மக்களை மிரட்டி மரங்களை வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மரங்கள் வெட்டப்படுவதால், மலை கரட்டில் வசித்து வந்த ஏராளமான மயில்கள் வெளியேறிவிட்டன.

மரங்களை வெட்டுவதற்கு சிட்கோ அதிகாரிகள் அனுமதி கொடுத்ததாக போலியான அனுமதிச் சீட்டை வைத்துள்ளனா். மரங்கள் வெட்டுவதற்கு சிட்கோ அதிகாரிகள் எப்படி அனுமதி வழங்க முடியும். வேலைவாய்ப்பு அவசியம் என்றாலும், இயற்கை வளத்தை அழிக்கும் முடிவை கைவிட்டு, சிட்கோ தொழிற்பேட்டை அமைப்பதற்கு வேறு இடத்தை தோ்வு செய்யவேண்டும். இல்லாதபட்சத்தில், தீவிர போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com