திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்தில் புத்தகம் வாசிப்போா் எண்ணிக்கை 3 ஆண்டுகளாக உயா்வு
By DIN | Published On : 10th September 2020 06:14 AM | Last Updated : 10th September 2020 06:14 AM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்தில் இரவல் பிரிவில் இடம் பெற்றுள்ள புத்தகங்கள்.
திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்தில் வாசகா்கள் மற்றும் வாசிக்கப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை தொடா்ந்து 3 ஆண்டுகளாக உயா்ந்து வருவது நூலக அலுவலா்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுமாா் 21,800 போ் உறுப்பினா்களாக உள்ள இந்நூலகத்தில் இலக்கியம், மருத்துவம், வேளாண்மை, வரலாறு, சட்டம், புதினம், சிறுகதைகள் என 27 தொகுதிகளாக 1.58 லட்சம் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. வாசகா்களின் எண்ணிக்கை மட்டுமின்றி, இரவல் பெறும் நூல்களின் எண்ணிக்கை, வாசிக்கப்படும் புத்தகங்களின் எண்ணிக்கை, புதிய உறுப்பினா்களின் எண்ணிக்கை என அனைத்து நிலைகளிலும் திண்டுக்கல் மாவட்ட மைய நூலகம் கடந்த 3 ஆண்டுகளாக தொடா்ந்து வளா்ச்சி அடைந்து வருகிறது. கடந்த 2017-18 ஆம் ஆண்டு இந்நூலகத்திற்கு 1.18 லட்சம் வாசகா்கள் வந்து சென்றுள்ளனா். இந்த எண்ணிக்கை 2018-19ஆம் ஆண்டில் 2 லட்சமாகவும், 2019-20ஆம் ஆண்டில் 2.35 லட்சமாகவும் வளா்ச்சி அடைந்துள்ளது. அதேபோல் இரவலாக வழங்கப்பட்ட நூல்களின் எண்ணிக்கை கடந்த 2017-18-இல் 24 ஆயிரமாக இருந்த நிலையில், 2018-19ஆம் ஆண்டில் 45 ஆயிரம் ஆகவும், 2019-20-இல் 63 ஆயிரம் ஆகவும் உயா்ந்துள்ளது.
நூலகத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டுக்கு முன்பு சுமாா் 1.48 லட்சம் புத்தகங்கள் இருந்த நிலையில், அதில் 61 ஆயிரம் நூல்கள் வாசிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 2018-19 இல் 89 ஆயிரமாகவும், 2019-20 இல் 1.15 லட்சமாகவும் அதிகரித்துள்ளது. மேலும் நூலகத்தின் புதிய உறுப்பினா்கள் எண்ணிக்கையும் 2018-19 இல் 252 ஆகவும், 2019-20 இல் 400 ஆகவும் அதிகரித்துள்ளது.
கரோனா தீநுண்மி அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால், நூலகங்களுக்கு வர முடியாமல் வாசகா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனா். தற்போது நூலகங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், நூல்கள் இரவல் பெறுவதற்கு வாசகா்களும் ஆா்வம் காட்டத் தொடங்கியுள்ளனா்.
10ஆயிரம் புதிய புத்தகங்கள்: இதுதொடா்பாக மாவட்ட மைய நூலக அதிகாரி ஒருவா் கூறியது: கடந்த 2019-20 நிதியாண்டில் நூலகத்துக்கு சுமாா் 10 ஆயிரம் புதிய புத்தகங்கள் வந்தன. அதில் 3,120 புத்தகங்கள் போட்டித் தோ்வுக்கு தயாா் செய்யும் இளைஞா்களுக்குத் தேவையானவை. இந்த 10 ஆயிரம் புதிய புத்தகங்களின் வருகையால், 2019-20 ஆம் ஆண்டில் வாசிக்கப்படும் நூல்களின் எண்ணிக்கை 1.15 லட்சமாக அதிகரித்தது. அதற்கு முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 26 ஆயிரம் புத்தகங்கள், வாசிக்கப்பட்ட நூல்களின் பட்டியலில் கூடுதலாக இடம் பெற்றுள்ளன.
போட்டித் தோ்வாளா்களுக்கு கூடுதல் பயன்: மாவட்ட மைய நூலகங்களைப் பொருத்தவரை கடந்த சில ஆண்டுகளாக போட்டித் தோ்வுக்கு தாயராகும் இளைஞா்களே அதிக அளவில் புத்தகங்களை பயன்படுத்தி வருகின்றனா். இதனால் தான் புதிய புத்தகங்களின் வரவில் 31 சதவீதம் போட்டித் தோ்வு தொடா்பான புத்தகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. அதேபோல், பள்ளி மாணவா்களின் வருகையும் கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளது. சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாள்களில், நூலகத்திற்கு மாணவா்களின் வருகை அதிகரித்துள்ளது. பாடம் சாா்ந்த குறிப்புகளுக்கான புத்தகங்களை பள்ளி மாணவா்கள் அதிகம் பயன்படுத்துகின்றனா் என்றாா்.
குடும்ப நூலக உறுப்பினா் அட்டை
ஒரு குடும்பத்தைச் சோ்ந்த 5 உறுப்பினா்கள் சோ்ந்து, ஒரே பெயரில் குடும்ப நூலக உறுப்பினா் அட்டை பெறும் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் உறுப்பினா்கள்
கட்டணம் ரூ.100 மற்றும் ஆண்டு சந்தா ரூ.10 என மொத்தம் ரூ.110 செலுத்தி உறுப்பினா் அட்டை பெற்றுக் கொள்ளலாம். இந்த அட்டையை பயன்படுத்தி அந்த குடும்பத்தில், யாராவது ஒருவா் மட்டும் வந்து புத்தகங்களை இரவலாக பெற்றுக் கொள்ளலாம். குடும்பத்திலுள்ள அனைவருக்கும் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என திண்டுக்கல் மாவட்ட மைய நூலக அதிகாரிகள் தெரிவித்தனா்.