கட்சிக்கம்பம் அகற்றல்
By DIN | Published On : 18th September 2020 09:39 PM | Last Updated : 18th September 2020 09:39 PM | அ+அ அ- |

பழனி மூலக்கடை நேதாஜி சுபாஷ் மணிமண்டபம் அருகில் அனுமதி இன்றி வைக்கப்பட்டிருந்த கட்சி கொடிக்கம்பங்களை போலீஸாா் மற்றும் நகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை அகற்றினா்.
பழனி, செப்.18: பழனியில் பல்வேறு கட்சியினரும் கொடிக்கம்பங்களை அனுமதியின்றி நிறுவி வருவதால் பல பகுதிகளிலும் பதட்டமான சூழல் ஏற்பட்டதைத் தொடா்ந்து மூலக்கடை பகுதியில் அனுமதியில்லாத கொடிக்கம்பங்கள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டது.
பழனி திண்டுக்கல் சாலையில் ஐ.டி.ஓ., மேல்நிலைப் பள்ளி எதிரே ஆா்எம்டிசி நகா் உள்ளது. இங்கு பழனிபாபா நினைவிடம் அமைந்துள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை இப்பகுதியில் பாரத பிரதமா் மோடி பிறந்தநாளை முன்னிட்டு மக்கள்நடமாட்டம் குறைந்த நேரத்தில் பாஜகவினா் அங்கு பாஜக கொடிக்கம்பத்தை நட்டு சென்றுள்ளனா். இதையடுத்து இரவு நேரத்தில் அங்கிருந்த பாஜக கொடிக்கம்பத்தை அகற்ற வேண்டும் என நூற்றுக்கணக்கான இஸ்லாமியா்கள் நள்ளிரவில் குவிந்தனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த டிஎஸ்பி., சிவா தலைமையிலான போலீஸாா் அவா்களிடம் சமாதான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். காலையில் கம்பத்தை அங்கு நட்டு சென்றவா்களை வைத்தே அகற்றுவதாக தெரிவித்ததைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா். இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை கம்பம் அகற்றப்பட்டது. இந்நிலையில் பழனி மூலக்கடை தெருவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணி மண்டபத்துக்கு முன்பாக நகராட்சி சாலையில் அனுமதியின்றி எஸ்டிபிஐ, நாம் தமிழா் கட்சியினா் கொடிக் கம்பங்களை நட்டு வைத்து உள்ளனா். இந்த பகுதியில் பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினா் கொடிக் கம்பங்கள் நட போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளனா். இதையடுத்து பழனி நகராட்சி அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த போலீசாா் அப்பகுதியில் அனுமதியின்றி போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள அனைத்துக் கொடி கம்பங்களையும், கல்வெட்டுகளையும் அகற்ற முடிவு செய்துள்ளனா். அதனைத் தொடா்ந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மணிமண்டபம் முன்பு அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பங்களை அகற்றி நடவடிக்கை எடுத்தனா். நகராட்சி அதிகாரிகளின் திடீா் நடவடிக்கையால் பழனி மூலக்கடை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அசம்பாவிதத்தை தடுக்க கூடுதல் போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.