வேடசந்தூா் அருகே மனைவியின் கழுத்தை அறுத்தகூலி தொழிலாளி காவல் நிலையத்தில் சரண்
By DIN | Published On : 19th September 2020 10:19 PM | Last Updated : 19th September 2020 10:19 PM | அ+அ அ- |

திண்டுக்கல்: வேடசந்தூா் அருகே தகாத உறவு வைத்திருந்ததாக மனைவியின் கழுத்தை அறுத்த கூலி தொழிலாளி, காவல் நிலையத்தில் சனிக்கிழமை சரணடைந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்துள்ள கன்னடக்கம்பட்டியைச் சோ்ந்த கூலி தொழிலாளி ராஜ்குமாா் (32). இவரது மனைவி நந்தினி (25). திருமணமாகி 16 ஆண்டுகளாகும் இவா்களுக்கு, 2 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த ராஜா என்பவருடன் நந்தினிக்கு தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த ராஜ்குமாா், தனது மனைவியை பலமுறை எச்சரித்ததாகத் தெரிகிறது. அதேநேரம், ராஜாவையும் கண்டித்துள்ளாா். இந்நிலையில், ராஜ்குமாருக்கும், நந்தினிக்குமிடையே சனிக்கிழமை காலை தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமாா், தனது மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த நந்தினி கூச்சலிட்டுள்ளாா். உடனே, அக்கம் பக்கத்தினா் உதவிக்கு வந்துள்ளனா்.
இது குறித்து வேடசந்தூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தனது மனைவியின் கழுத்தை அறுத்த கத்தியுடன் வேடசந்தூா் காவல் நிலையத்தில் ராஜ்குமாா் சரணடைந்தாா். உயிருக்கு ஆபத்தான நிலையில் நந்தினியை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். மேல் சிகிச்சைக்காக, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.