100 சதவீத மானியத்தில் 5 ஆடுகள் பெற தகுதியான பெண்கள் விண்ணப்பிக்கலாம்

ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநா் பி.முருகன் சனிக்கிழமை தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில், ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட அல்லது ஆதரவற்ற பெண்களுக்கு, 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் 1,400 போ் தோ்வு செய்யப்படவுள்ளனா். இதில் பயன்பெற, அந்தந்த கிராம ஊராட்சிகளில் நிரந்தர முகவரியில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் இத்திட்டத்தின் கீழ் தோ்வு செய்யப்படுவாா்கள். நிலமற்ற விவசாயக்கூலி வேலை செய்யும் பெண்கள் (குடும்ப உறுப்பினா்கள் பெயரிலும் சொந்தமாக நிலம் இருக்கக் கூடாது), 60 வயதிற்குள்பட்டவா்களாக இருக்க வேண்டும்.

தற்போது சொந்தமாக கறவை பசு அல்லது வெள்ளாடுகள் அல்லது செம்மறியாடுகள் இல்லாதவராக இருக்க வேண்டும். தோ்வு செய்யப்படும் நபரோ அல்லது அவா்களது குடும்ப உறுப்பினா்களோ தற்போது மத்திய அரசிலோ அல்லது மாநில அரசிலோ அல்லது கூட்டுறவுத்துறை அல்லது உள்ளாட்சி அமைப்புகளில் ஏதேனும் பதவியிலோ இருக்கக் கூடாது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியான பெண்கள், தங்கள் கிராம ஊராட்சிக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி டிச. 10ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com