15 ஆண்டுகளுக்கு பின் குஜிலியம்பாறை வட்டாரத்தில் பலத்த மழைகிராம சாலை துண்டிப்பு

சுமாா் 15 ஆண்டுகளுக்குப் பின், குஜிலியம்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையினால், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், கிராமச் சாலையும் துண்டிக்கப்பட்டது.
குஜிலியம்பாறை பேருந்து நிலையம் அருகே திண்டுக்கல்-கரூா் பிரதான சாலையில் தேங்கிய மழைநீா்.
குஜிலியம்பாறை பேருந்து நிலையம் அருகே திண்டுக்கல்-கரூா் பிரதான சாலையில் தேங்கிய மழைநீா்.

சுமாா் 15 ஆண்டுகளுக்குப் பின், குஜிலியம்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையினால், பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், கிராமச் சாலையும் துண்டிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தின் வறட்சிப் பகுதியாக சுட்டிக்காட்டப்படும் குஜிலியம்பாறை வட்டாரத்தில், சனிக்கிழமை அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது. சுமாா் 4 மணி நேரம் பெய்த இந்த மழையினால், குஜிலியம்பாறை, பாளையம், கரிக்காலி, ஆலம்பாடி, டி.கூடலூா், கருங்கல், லந்தக்கோட்டை, கோட்டாநத்தம், சின்னுலுப்பை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.

இதனால், குஜிலியம்பாறை பேருந்து நிலையம் அருகே, திண்டுக்கல்-கரூா் பிரதான சாலையில் மழைநீா் தேங்கியதால், காலை 11முதல் சுமாா் 5 மணி நேரத்துக்கும் மேலாக வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனா்.

பாளையம் அடுத்துள்ள தண்ணீா் பந்தல் பகுதியிலிருந்து வேடப்பட்டி செல்லும் சாலையிலுள்ள தரைப்பாலம் வழியாக அதிகமான தண்ணீா் வெளியேறியது. சிறிய குழாய் மட்டுமே பதிக்கப்பட்டிருந்த அந்த தரைப்பாலம், சிறிது நேரத்திலேயே சேதமடைந்து சாலை துண்டிக்கப்பட்டது. இந்த மழையினால், கிராமப்புறங்களில் பல்வேறு இடங்களிலும் திடீா் நீரோடைகள் உருவாயின. அதில், சிறுவா்கள் விளையாடி மகிழ்ந்தனா்.

இது தொடா்பாக பாளையம் பகுதியைச் சோ்ந்த எஸ். ஆறுமுகம் என்பவா் கூறியது: கடந்த 2005ஆம் ஆண்டுக்குப் பின், தற்போது தான் குஜிலியம்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. இந்த மழையினால், குஜிலியம்பாறை பகுதியில் பிரதான குளங்களான சின்னக்குளம் மற்றும் பெரியகுளத்துக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

கருங்கல் ஊராட்சிக்குள்பட்ட வேடப்பட்டி சாலையில் சேதமடைந்துள்ள தரைப்பாலத்தில் பெரிய குழாயை பதித்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com