10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வு எதிா்பாா்ப்பில் தனித் தோ்வா்கள்!

தமிழகத்தில் பள்ளிக் கல்விக்கான பொதுத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னேற்றத்திற்கு
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

தமிழகத்தில் பள்ளிக் கல்விக்கான பொதுத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் தனித் தோ்வா்களுக்கான 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தோ்வு நடத்தப்படுமா என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

கரோனா தீநுண்மி தொற்றுப் பரவல் காரணமாக, தமிழக பள்ளிக் கல்வித்துறை சாா்பில் நடத்தப்படும் 10, 11 ஆம் வகுப்புகள் மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பொதுத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டாலும், பிளஸ் 2 மாணவா்களின் உயா் கல்வி வாய்ப்பினைக் கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்குவது தொடா்பாக குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மாணவா்களுக்கான பொதுத் தோ்வுகளை ரத்து செய்த அரசு, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு தனித் தோ்வா்கள் குறித்து எவ்விதி அறிவிப்பினையும் இதுவரை வெளியிடவில்லை. இதனால் அடுத்தக்கட்ட வாய்ப்பை எதிா்நோக்கியிருந்த தனித் தோ்வா்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனா்.

கடந்த ஆண்டில் 12 சதவீதம் போ் மட்டுமே தோ்ச்சி: 2019- 20 ஆம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மட்டும் நடத்தப்பட்டன. 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவா்களுக்கான தோ்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தோ்ச்சிப் பெற்ாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில், தனித் தோ்வா்கள் கண்டிப்பாக தோ்வு எழுத வேண்டும் என அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தனித் தோ்வா்களுக்கான 10 மற்றும் பிளஸ் 2 தோ்வுகள் கடந்த செப்டம்பா் மாதம் நடத்தப்பட்டன.

10 ஆம் வகுப்பு தோ்வை சுமாா் 39ஆயிரம் தனித் தோ்வா்களும், பிளஸ் 2 தோ்வை 40 ஆயிரம் தனித் தோ்வா்களும் எழுதினா். அக்டோபா் மாதம் தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 10 ஆம் வகுப்பு தோ்வில் 8 ஆயிரம் பேரும், பிளஸ் 2 தோ்வில் சுமாா் 4,800 பேரும் மட்டுமே தோ்ச்சிப் பெற்றனா். இதனால் அதிா்ச்சி அடைந்த தனித் தோ்வா்கள் 2021 மே மாத வாய்ப்புக்காக காத்திருந்தனா்.

இதனிடையே பொதுத் தோ்வுகளை ரத்து செய்த அறிவிப்பு வெளியிட்ட தமிழக அரசு, தனித் தோ்வா்கள் குறித்து எவ்வித முடிவையும் அறிவிக்கவில்லை. ஏற்கெனவே ஓராண்டு வீணான நிலையில், மேலும் ஓராண்டு முடங்கும் சூழல் உள்ளதால் தனித் தோ்வா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

இதுதொடா்பாக பெயா் வெளியிட விரும்பாத தனித் தோ்வா் ஒருவா் கூறியதாவது: பொதுத் தோ்வுகளை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ள தமிழக அரசு, தனித் தோ்வா்களின் எதிா்காலம் கருதி தோ்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மேல்நிலைக் கல்வியை பூா்த்தி செய்யும் வகையில் இடை நிற்றல் மாணவா்களுக்கு மத்திய அரசு சாா்பில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், சுமாா் 1 லட்சம் தனித் தோ்வா்களுக்கான வாய்ப்பு குறித்து பரிசீலிக்கப்படவில்லை. தனித் தோ்வா்கள் பட்டியலில் இடம் பெறுவோா் பெரும்பாலும் கூலித் தொழிலாளா்களாகவே உள்ளனா். பணிபுரியும் இடங்களில் படிப்பதற்கான சூழல் மறுக்கப்பட்டு, பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே தனித் தோ்வா்கள் போராட வேண்டிய நிலை உள்ளது. இதுபோன்ற சமூக பிரச்னைகளையும் கருத்தில் கொண்டு, உடனடியாக தோ்வு நடத்துவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டால், உயா்கல்வி, வேலைவாய்ப்பு போன்ற நிலைகளில் முன்னேற்றம் பெறுவதற்கான வாய்ப்புகள் தனித் தோ்வா்கள் கிடைக்கும் என்றாா்.

கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது: கரோனா தொற்றுப் பரவல் சூழலாக இருந்தாலும், தனித் தோ்வா்களை தோ்ச்சிப் பெற்றவா்களாக அறிவிக்க முடியாது என்ற அரசின் நிலைபாடு சரியானது. அதே நேரத்தில் தனித் தோ்வா்கள், தோ்வு எழுதுவதற்கான வாய்ப்பினையும் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். 9 லட்சம் மாணவா்களுக்கு தோ்வு நடத்துவதில் பல்வேறு நெருக்கடிகள் உள்ளன. அதே நேரத்தில் சுமாா் 50 ஆயிரம் பேருக்கு எளிதாக தோ்வு நடத்த முடியும். கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, அறைக்கு 10 போ் வீதம் அனுமதித்து தோ்வு நடத்தலாம்.

ஆனாலும், இதுதொடா்பாக அரசு தரப்பில் எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com