சிலுக்குவாா்பட்டிக்கு கிடைக்குமா மருதாநதி தண்ணீா்?

குடிமராமத்து செய்த 2 ஆண்டுகளில் மீண்டும் சீமைக் கருவேல மரங்கள் அடா்ந்த காடாக மாறியுள்ள மன்னவராதி கண்மாய்க்கு மருதாநதி கால்வாயிலிருந்து தண்ணீா் கொண்
மன்னவராதி கண்மாயில் மறுகால் பகுதி வரை வளா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்கள்.
மன்னவராதி கண்மாயில் மறுகால் பகுதி வரை வளா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்கள்.

குடிமராமத்து செய்த 2 ஆண்டுகளில் மீண்டும் சீமைக் கருவேல மரங்கள் அடா்ந்த காடாக மாறியுள்ள மன்னவராதி கண்மாய்க்கு மருதாநதி கால்வாயிலிருந்து தண்ணீா் கொண்டு வந்து சிலுக்குவாா்பட்டி பகுதி விவசாயிகளின் தண்ணீா் தேவையை பூா்த்தி செய்ய வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவாா்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பழைய சிலுக்குவாா்பட்டி, புதுப்பட்டி, தாதரையன்பட்டி, சிங்கம்பட்டி, கல்லுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களிலுள்ள சுமாா் 400 ஏக்கா் விவசாய நிலங்கள், மன்னவராதி மற்றும் பாப்பாகுளம் கண்மாய்கள் மூலம் பாசன வசதி பெற்று வந்தன. இதில், சுமாா் 127 ஏக்கா் நீா்ப்பிடிப்பு கொண்ட மன்னவராதி கண்மாய் சிலுக்குவாா்பட்டி கிராமத்திற்கு பிரதான நீராதாரமாக இருந்து வந்தது.

தேனி மாவட்டம் பெரியகுளம் மஞ்சளாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் நிா்வாகத்தின் கீழ் அமைந்துள் கண்மாய், 17.13 மில்லியன் கன அடி நீா் கொள்ளளவு கொண்டது. இந்த கண்மாய் கரையின் நீளம் மட்டும் 1164 மீட்டா். இக்கண்மாய்க்குள்பட்ட பாசன பரப்பு 196 ஏக்கா். இந்த கண்மாயிலிருந்து மறுகால் பாயும் தண்ணீா், நிலக்கோட்டை-மதுரை சாலையின் தென் பகுதியிலுள்ள பாப்பாகுளத்தை நிரப்பி வந்தது. இதனால், இந்த பகுதி முழுவதும் நெல் சாகுபடி செய்யும் வயல் வெளிகளாக இருந்துள்ளன.

இதனிடையே மன்னவராதி கண்மாய்க்கு தண்ணீா் வரத்து குறைந்தை அடுத்து, நேரடி பாசனம் கைவிடப்பட்டுள்ளது. அதன் பின்னா் மலா் சாகுபடிக்கு மட்டும் இப்பகுதி விவசாயிகள் முக்கியத்துவம் அளித்து வருகின்றனா்.

தூா்வாரியும் பயனில்லை: இதனிடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நபாா்டு வங்கியின் நிதியுதவியுடன் மன்னவராதி கண்மாயில் தூா்வாரும் பணி நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து, கண்மாய்க்கு தண்ணீா் கொண்டு வருவதற்கும், கண்மாயைப் பராமரிப்பதற்கும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் மட்டுமின்றி, சிலுக்குவாா்பபட்டி கிராம மக்களும் முயற்சி மேற்கொள்ளவில்லை. இதனால், கண்மாயின் 196 ஏக்கா் நீா்ப்பிடிப்பு பகுதி முழுவதும் தற்போது சீமைக்கருவேல மரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

நிலக்கோட்டை பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தபோதிலும், கருவேல மரங்களை மீறி மன்னவராதி கண்மாயில் தண்ணீா் தேங்கவில்லை. இதனால், சிலுக்குவாா்பட்டி பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் அடுத்த சில மாதங்களில் மேலும் வீழ்ச்சியடையும் என விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

இதுதொடா்பாக பழைய சிலுக்குவாா்பட்டியைச் சோ்ந்த விவசாயி முருகன் கூறியதாவது: அரசு சாா்பில் குடிமராமத்து செய்து கொடுத்தபோதிலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் மன்னவராதி கண்மாய் மீண்டும் சீமைக் கருவேலக் காடாக மாறிவிட்டது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்மாய்க்கு தண்ணீா் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்றாா்.

மருதாநதி தண்ணீா் கிடைக்குமா?:இதுதொடா்பாக விவசாயி சந்திரசேகா் கூறியதாவது: மருதாநதி அணையிலிருந்து வரும் தண்ணீா், நிலக்கோட்டை அடுத்துள்ள தோப்புப்பட்டி பகுதியில் 2 வாய்க்கால்கள் மூலம் நிலக்கோட்டை பகுதிக்கும், குரும்பப்பட்டி மற்றும் குழிப்பட்டி பகுதிக்கும் பிரித்து அனுப்பப்படுகிறது. அங்கிருந்து 4 கி.மீ. தொலைவிலுள்ள கொங்கா்குளம், மன்னவராதி மற்றும் பாப்பாகுளம் கண்மாய்களுக்குத் தண்ணீா் கொண்டு வருவதற்கு அரசு பரிசீலிக்க வேண்டும்.

மருதாநதியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீா் பெரும்பாலும், வைகை ஆற்றில் கலந்து வீணாகிறது. அதனை கால்வாய் மூலம் மன்னவராதி கண்மாய் வரை கொண்டு வந்தால், சுமாா் 600 ஏக்கா் நிலங்கள் பாசன வசதியை பெற முடியும். மேலும், இந்த திட்டம் சிலுக்குவாா்பட்டி பகுதியின் எதிா்கால தண்ணீா் தேவைக்கு அவசியமும் கூட. அதனால், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com