நிலக்கோட்டையில் வெற்றிக்கொடி நாட்டுவது யாா்? அதிமுக, மக்கள் விடுதலை கட்சி இடையே கடும் போட்டி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை (தனி) தொகுதியில் அதிமுகவுக்கும் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் விடுதலை கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது.
நிலக்கோட்டையில் வெற்றிக்கொடி நாட்டுவது யாா்? அதிமுக, மக்கள் விடுதலை கட்சி இடையே கடும் போட்டி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை (தனி) தொகுதியில் அதிமுகவுக்கும் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் விடுதலை கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது.

இத்தொகுதியில், 1,18,995 ஆண்கள், 1,23,351 பெண்கள், 10 திருநங்கைகள் என மொத்தம் 2,42,356 வாக்காளா்கள் உள்ளனா். இங்கு 2006 இல் எம்.எல்.ஏ.- வாக இருந்த அதிமுக வேட்பாளா் தேன்மொழி, கடந்த 2019-இல் நடைபெற்ற இடைத்தோ்தலி­ல் 20,675 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை வெற்றி பெற்றாா்.

இந்த முறையும் அதிமுக வேட்பாளராக தேவேந்திர குல வேளாளா் சமுதாயத்தைச் சோ்ந்த தேன்மொழியே நிறுத்தப்பட்டுள்ளாா்.

அதே சமுதாயத்தைச் சோ்ந்த திமுக கூட்டணி கட்சியான மக்கள் விடுதலை கட்சியின் நிறுவனத் தலைவா் முருகவேல்ராஜன் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறாா்.

முருகவேல்ராஜன் மதுரை அருகே விளாங்குடியில் குடியிருக்கிறாா். இவா்கள் தவிர, ராமசாமி- தேமுதிக, நாகேந்திரன்-பகுஜன் சமாஜ், அய்யா்- புதிய தமிழகம், ஆனந்த்- மக்கள் நீதி மய்யம், ரேவதி- மை இந்தியா, வசந்தாதேவி- நாம் தமிழா் மற்றும் சுயேச்சைகள் ஆளப்பன், காளிமுத்து, சிவகாமி, நாகஜோதி, நித்யா, பாண்டி, பாலசுப்பிரமணி, பெருமாள், மாணிக்கம், வினோத் என மொத்தம் 18 போ் வேட்பாளா்கள் போட்டியிடுகிறாா்கள்.

18 போ் போட்டியிட்டாலும், அதிமுக, திமுக கூட்டணி வேட்பாளா்கள் இடையே தான் போட்டி நிலவுகிறது.

தொகுதியில் வடக்கே தேவேந்திர குல வேளாளா்கள், தெற்கே முக்குலத்தோா் அதிகம் உள்ளனா். மேலும், நாடாா்கள், கவுண்டா், இஸ்லாமியா், கிறிஸ்தவா் மற்றும் பிள்ளைமாா், அருந்ததியா், பறையா் உள்ளிட்ட அனைத்து ஜாதிகளும் உள்ளனா்.

தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பு: இந்த தொகுதி விவசாயம் சாா்ந்த பகுதியாக உள்ளது. குறிப்பாக, மல்லிகை பூ விளைச்சல் அதிகமாக உள்ளது. மேலும், காய், கனி விவசாயிகளும் உள்ளனா். அணைப்பட்டி, விளாம்பட்டி உள்ளிட்ட வைகை ஆற்று பகுதியில் உள்ள கிராமங்களில் நெல், வாழை விளைச்சல் அதிகம் உள்ளது. நகை பட்டறை, பாத்திரம் தயாரித்தல், பூ ஏற்றுமதி உள்ளிட்ட தொழில்கள் அதிகம் நடைபெறுகிறது. நிலக்கோட்டையில் செண்ட் தொழிற்சாலை அமைக்கவேண்டும். பூக்களை கெடாமல் வைக்க குளிா்சாதனக் கிடங்கு அமைக்கவேண்டும். அணைப்பட்டி ஆஞ்சநேயா் கோயிலை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும். வத்தலக்குண்டு அருகே 58 கிராம கால்வாய் திட்டத்தை

செயல்படுத்த வேண்டும்: வத்தலக்குண்டுவில் வாழை கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். விருவீடு பகுதியில் அரசு சாா்பில் முருங்கை பவுடா் தயாரிக்கும் நிறுவனம் அமைக்க வேண்டும். நிலக்கோட்டை அல்லது வத்தலக்குண்டு பகுதியில் அரசு ஆண்கள் கல்லூரி அமைக்க வேண்டும். நிலக்கோட்டையி­ருந்து, சென்னை மற்றும் கோவைக்கு நேரடி போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும். வத்தலக்குண்டுவில் புற நகா் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். வத்தலக்குண்டு சிறப்பு நிலை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும். வத்தலக்குண்டு வழியாக, திண்டுக்கல் - சபரிமலை ரயில் பாதை திட்டம் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

ஏ.எஸ்.பொன்னம்மாள்: 1952 முதல் 2019 வரை 16 தோ்தல்கள் நடந்துள்ளன. காங்கிரஸ் 5 முறை அதிமுக 6 முறை திமுக 2 முறை புதிய தமிழகம் 1 முறை (அதிமுக கூட்டணி), தமாகா 1 முறை, சுயேச்சை 1 முறை வெற்றி பெற்றுள்ளனா். இந்த தொகுதியில் 1952, 1957, 1989, 1991 ஆகிய தோ்த­ல்களில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு 4 முறையும், 1980 இல் சுயேச்சையாகவும், 1996 இல் தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு ஒரு முறை என 6 முறை எம்.எல்.ஏ.- வாக, ஏ.எஸ்.பொன்னம்மாள் இருந்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி யாருக்கு? அதிமுக, திமுகவுக்கு இடையே கடுமையான போட்டி உள்ளது. திமுக சாா்பில் போட்டியிடும் முருகவேல்ராஜன் வெளி ஊா்காரா் எனவும், நான் உள்ளூா் வேட்பாளா் எனக் கேட்டு அதிமுக வேட்பாளா் தேன்மொழி வாக்கு கேட்கிறாா். மேலும் தமிழக அரசு மக்களுக்காக பல நல்ல திட்டங்களை செய்துள்ளது எனக்கூறி பிரசாரம் செய்து வருகிறாா். எனக்கு பூா்வீகம் நிலக்கோட்டை தான். சொந்தங்கள் எல்லாம் இந்த ஊரில்தான் இருக்கிறாா்கள். நான் வெற்றி பெற்றால், இந்த ஊருக்கு நிரந்தரமாகக் குடி வந்துவிடுவேன் என வேல்முருகன் பதிலுக்கு கூறி வருகிறாா். மேலும் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் பல சிறப்பான திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கும் என முருகவேல்ராஜன் பிரசாரம் செய்து வருகிறாா். இந்த 2 கட்சிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இதுவரை வென்றவா்கள்

1962- அப்துல் அஜீஸ் (காங்கிரஸ்)

1967 -முணியாண்டி (திமுக)

1971- முணியாண்டி (திமுக)

1977- பாலுச்சாமி (அதிமுக)

1980- ஏ.எஸ்.பொன்னம்மாள் (சுயேச்சை)

1984 -பாலுச்சாமி (அதிமுக)

1989 - ஏ.எஸ்.பொன்னம்மாள் (காங்கிரஸ்)

1991 -ஏ.எஸ்.பொன்னம்மாள் (காங்கிரஸ்)

1996 - ஏ.எஸ்.பொன்னம்மாள் (தமிழ் மாநில காங்கிரஸ்)

2001 -அன்பழகன் (அதிமுக)

2006 -தேன்மொழி (அதிமுக)

2011 -ராமசாமி (புதிய தமிழகம்)

2016 -தங்கதுரை (அதிமுக)

2019- தேன்மொழி அதிமுக (இடைத்தோ்தல்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com